50 கோடி ரூபாய் முறைகேடு.. தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் அரங்கேறும் வியாபம் பார்ட் 2 | polytenic lecturers exam malpractices . Series - 2

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (04/01/2018)

கடைசி தொடர்பு:21:37 (04/01/2018)

50 கோடி ரூபாய் முறைகேடு.. தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் அரங்கேறும் வியாபம் பார்ட் 2

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வில் முறைகேடு செய்தவர்களைக் காப்பாற்றும் வேலையில் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மதிப்பெண் உள்ளீடு செய்ததில் மோசடி செய்தார் என்று கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதிகாரவர்க்கத்தில் இருக்கும் விஐபிக்களைக் காப்பாற்றும் வேலையில் போலீஸ் ஈடுபடுகிறார்கள் என்றும் நம்பகத்தன்மையற்ற இந்த பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் இந்தத் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

தமிழக அரசின் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி, 2017 ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தியது. 'தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம்; தேர்வு எழுதுவதற்கு நேரம் போதவில்லை' என்று தேர்வு நடந்த தினத்தன்றே புகார் தெரிவித்தனர். வினாத்தாள் கடினம் என்பதால் கட்-ஆப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இந்தத் தேர்வு முடிவுகள் 2017 நவம்பர் 7-ம் தேதி வெளியானபோது, மொத்தம் 190-க்கு ஏராளமானோர் 120 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தனர்.

பாலிடெக்னிக்

தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் இத்தேர்வில் பாஸாகிவிட்டார்கள் என்ற புகாருக்கு இடையே, மிகப்பெரிய அளவில் ஏதோ முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்து, தேர்வெழுதிய மாணவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜெகநாதனுக்குப் புகார் அனுப்பினர். அந்தக் கடிதத்தில், ''டி.ஆர்.பி. நடத்தும் ஒவ்வொரு போட்டித்தேர்வும் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் கடினமாகவே வினாத்தாள் செட் செய்யப்படுகிறது. அதுபோலவே கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வும் மிகவும் கடினமாவே இருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக கட்-ஆப் மதிப்பெண் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதைவைத்துப் பார்க்கும்போது, ஏதோ முறைகேடு நடந்திருப்பதை உணர முடிகிறது. டி.ஆர்.பி-யின் போட்டித்தேர்வுக்காகப் பல ஆண்டுகளாக அல்லும்பகலும் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடாதீர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.

போட்டித்தேர்வுக்குப் பயிற்சியளிக்கும் வல்லுநர்கள், மாதிரி வினாத்தாள் தொடர்பான சில ஆதாரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேர்வு வாரியம், 'சான்றிதழ் சரிபார்ப்புக்கு' அழைக்கப்பட்டிருந்தவர்களின் விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்தது. அதில், முறைகேடு நடந்திருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து உண்மையை மூடிமறைக்காமல் முறைகேடுகளை ஒப்புக்கொண்டு, அந்தத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றது. விடைத்தாள்கள் மறுஆய்வின்போது கணிதத்தில் வெறும் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவருக்கு 115 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 55 மதிப்பெண் எடுத்த மற்றொருவருக்கு 120 மதிப்பெண்ணும் என மதிப்பெண்ணை அதிகமாக மாற்றிப் போட்டு இருப்பது கண்டறியப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 2000 பேரில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண், இதுபோன்று வேறுபாட்டுடன் மாற்றிப் போட்டிருந்தது தெரியவந்தது. ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேடான இந்த மதிப்பெண் குளறுபடியால், ஒவ்வொரு பாடத்திற்குமான தரவரிசைப் பட்டியலில் ஆயிரம் இடங்களுக்கும் பின்னால் இருந்தவர்கள், முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர். இதனால், உண்மையாக அதிக மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்கள், பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவர்கள் விரிவுரையாளர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதையடுத்து, இந்தத் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரின் விடைத்தாள் நகல்கள் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் புதியதாகத் தயாரிக்கப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், மதிப்பெண் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் முறைகேடு தொடர்பாக, கால் டாக்ஸி டிரைவர் கணேஷ் என்பவரை கடந்த 28-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். 

ராஜலிங்கம்முறைகேடு குறித்து புளியங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜலிங்கம், ''ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்தே போட்டித் தேர்வுகளை எழுதுகிறோம். ஆனால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக தற்போது மாணவர்களே பிடித்துக் கொடுத்து இருக்கிறார்கள். மதிப்பெண் உள்ளீடு செய்வதில் நடந்த முறைகேடுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் திணறுகிறது. தனியார் ஏஜென்ஸிதான் தவறு செய்தது போல இந்தப் பிரச்னையைக் கொண்டுசெல்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகள்தான், இந்த முறைகேடுகளுக்குக் காரணம். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் பாயவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் மதிப்பெண் உள்ளீடு செய்ததில் மட்டுமல்ல; விடைத்தாளிலேயும் திருத்தம் செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். 

இப்போது தேர்ச்சிபெற்றவர்கள் என்று தெரிவித்து 1:2 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த அனைவரின் விடைத்தாள்களையும் தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது இன்னும் நிறைய உண்மைகள் வெளிவரும். எனவே, நம்பகத்தன்மையை இழந்து இருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், தனது தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்று, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை புதியதாக வெளியிட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். இப்படி, விசாரணை என்று காலவிரயம் செய்வதைவிட புது அறிவிப்பாணை வெளியிட்டால் மூன்றே மாதத்தில் தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்துவிடலாம். இணையத்தில் வெளியிட்ட ஓ.எம்.ஆர்களை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் பெற்ற மதிப்பெண்ணோடு  ஒப்பிட்டுப்பார்க்க போதிய காலஅவகாசம் தரவில்லை. எனவே மீண்டும் அந்த ஓ.எம்.ஆர் ஷீட்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்'' என்றார்.

சுனில் ராஜா தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் சுனில்ராஜா, ''பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் முதல் முதலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார் கொடுத்தோம். அதன் தொடர்ச்சியாகவே கணேஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரு சாதாரண கால் டாக்‌ஸி டிரைவர் கணேஷ்குமார் மட்டும் செய்திருக்க முடியாது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கவனிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 'இது ஒரு சிறிய தவறு' என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். அவரின் இந்தப் பேட்டி, தேர்வு வாரிய மோசடி குறித்து, அவர் வெட்கப்பட்டதாகவோ, வேதனைப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட வேண்டும். இப்போது நடக்கும் போலீஸ் விசாரணையின் போக்கைப் பார்த்தால் யார், யாரையோ காப்பாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அதற்கு இடம் கொடுக்காமல், இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து தேர்வு எழுதியவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் துணை நிற்க வேண்டும். ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்ததாகச் சொல்லப்படும் இந்த பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பான உண்மைகளை சீக்கிரமே வெளியே கொண்டுவந்து குற்றவாளிகளைச் சட்டத்தின்முன்பு நிறுத்த வேண்டும். மத்தியபிரதேசத்தில் நடந்த வியாபம் முறைகேடு இந்தியாவையே உலுக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிராகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்கள் கொதித்து எழவேண்டும்'' என்றார்.

   பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னைகளில் என்ன நடக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இருக்கிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close