அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்!

அமெரிக்காவின் எடின்போரோ பல்கலைக்கழகத்துடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் கல்வி குறித்து இணைந்து செயலாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நெல்லை மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ், ஆங்கிலம், தகவல் தொடர்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு புலனாய்வு, குற்றவியல் சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் குற்றவியல்துறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குற்றவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனுக்குடன் வேலை வாய்ப்புக் கிடைப்பதால் இந்தத் துறையில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில், நெல்லையில் பயிலும் மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று துறை ரீதியான கல்வியைக் கற்கும் வகையிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் வகையிலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பாக அமெரிக்காவின் பெனின்சுல்வேனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் எடின்போரோ பல்கலைக்கழகத்துடன் கல்விப் பரிமாற்றம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் பாஸ்கரன் மற்றும் எடின்போரோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்  இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் கோவிந்தராஜூ, குற்றவியல் துறைத் தலைவர் பியூலா சேகர், சர்வதேச கல்விக்கான இயக்குநர் பலவேசம் ஆகியோர் உடனிருந்தனர்.

கல்வி தொடர்பான ஒப்பந்தம்

இதுகுறித்து துணை வேந்தர் பாஸ்கரன் கூறுகையில், ’’1857-ல் தொடங்கப்பட்ட எடின்போரோ பல்கலைக்கழகம் 25 ஆண்டுகளேயான மனோனமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் கல்வித் தொடர்பான ஒப்பந்தம் செய்ய முன்வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் குற்றவியல்துறை மாணவ, மாணவிகள் அமெரிக்காவுக்குச் சென்று கல்விப் பயிலும் வாய்ப்புக் கிடைக்கும்.

அத்துடன், நமது பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தால் கல்விப் பரிமாற்றத்துக்காகவும் அங்கு கற்பிப்பதற்காகவும் அழைக்கப்படுவார்கள். அத்துடன், மாணவ மாணவிகள் அங்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் உருவாகும். அதேபோல, அங்குள்ள மாணவ மாணவிகள் இங்கு வந்து கல்வி பயிலுவார்கள். அங்குள்ள பேராசிரியர்களும் இங்கே வந்து கற்பிப்பார்கள். இரு தரப்பினரும் இணைந்து கூட்டாக ஆராய்ச்சி செய்தல் மற்றும் வெளியீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். 

தற்போது கூட எடின்போரா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் நமது மாணவர்களுக்கு ’சீரியல் மர்டரர்ஸ்’ எனப்படும் தொடர் கொலை குறித்த கல்வி பற்றி 15 நாள் பயிற்சி அளித்து வருகிறார். இத்தகைய வாய்ப்பு நமது மாணவர்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். அத்துடன், நமது மாணவர்கள் இரட்டைப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது’’ என்றார் நம்பிக்கையுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!