பார்வையற்றோருக்கு உதவிய லூயி ப்ரைலி பிறந்தநாள்: நெல்லையில் பள்ளி மாணவர்கள் மரியாதை!

பார்வையற்ற மாணவர்கள் கல்வி கற்க உதவும் வகையில் பிரைலி எழுத்து முறையைக் கண்டுபிடித்த லூயி ப்ரைலி பிறந்தநாளையொட்டி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

லூயி பிரைலி பிறந்தநாள்

பார்வையற்றவர்களும் கல்வி கற்க முடியும் என்கிற நிலைமை உருவாகக் காரணமாக இருந்தவர், லூயி ப்ரைலி. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் 1809-ம் வருடம் ஜனவரி 4-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் விபத்தில் சிக்கியதில் இரு கண்களிலும் பார்வையை இழந்த இவருக்கு கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் குறையவில்லை. அதனால் கல்வி கற்கச் சென்ற அவருக்கு எழுத்துக்களைப் படிப்பதில் குறைபாடு ஏற்பட்டது.

அதனால், தன்னைப் போல குறைபாடு உள்ளவர்களும் பயன் அடையும் வகையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற உந்துதலில் செயல்பட்ட  அவர்  6 புள்ளிகளை கொண்ட எழுத்துக்களை 1824-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதுவரையிலும் ராணுவ ரகசியங்களை அனுப்ப 12 புள்ளிகளைக் கொண்ட எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் இந்த எழுத்துக்களை வடிவமைத்தார். 

பின்னர் அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்த அவர், தனது 20-வது வயதில் 1829-ம் ஆண்டு ப்ரைலி எழுத்துக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் வடிவமைத்த ப்ரைலி எழுத்துக்களால் இன்று உலகம் முழுவதும் பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்கள் கல்வி கற்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. ப்ரைலியின் பிறந்த தினத்தையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

பார்வையற்ற மாணவர்கள்

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘’தமிழகத்தின் முதல் பார்வையற்றோர் பள்ளி பாளையங்கோட்டையில் தான் தொடங்கப்பட்டது. அந்தப் பள்ளியில் நாங்கள் பயின்று வருகிறோம் எங்களுக்கான எழுத்துக்களை கண்டுபிடித்த லூயி ப்ரைலியின் பிறந்தநாளில் அவரை பெருமைப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சமூகத்தில் பிறருடன் எங்களாலும் போட்டியிட முடியும் என்கிற நிலைமையை உருவாக்கியவருக்கு மரியாதை செலுத்தியதில் மகிழ்ச்சியாக உள்ளோம்’’ என்றார்கள். 

பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டனிடம் பேசுகையில், ’’பார்வையற்றவர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி இது. தமிழகத்தில் இங்கு தான் முதன் முதலில் பள்ளி செயல்பட்டது. இந்தப் பள்ளியில் தற்போது 177 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் லூயி ப்ரைலிக்கு மரியாதை செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!