வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (04/01/2018)

கடைசி தொடர்பு:08:10 (05/01/2018)

"இழப்பீட்டுத் தொகையை திரும்பத் தாருங்கள்!" - விவசாயிகளுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ்

சாயக் கழிவுநீர்

சாயக் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட நொய்யல் பாசன விவசாயிகளுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட ரூ.25 கோடி இழப்பீட்டுத் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு, விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அளித்து வருகின்றனர் அரசு அதிகாரிகள்.

திருப்பூரில் கடந்த 2010-ம் ஆண்டுவரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்ட சுத்திகரிப்பு செய்யப்படாத சாய நீரால், திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. திருப்பூர் முதல் கொடுமுடி வரை நொய்யலாற்றுக் கரையில் இருந்த சுமார் 1,46,000 ஏக்கர் நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு இழப்பீடு வேண்டி, வழக்குத் தொடர்ந்தனர். 

அதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும், சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையைத் தூய்மைப்படுத்தவும் சாயப்பட்டறைகள் சார்பாக ரூபாய் 75 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இரண்டு ஆண்டுகள் ஆய்வுப் பணியும் மேற்கொள்ளப்பட்டு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கையும் அளிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு முதற்கட்டமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 398 விவசாயிகளுக்கு ரூபாய் 25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால், கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையானது சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாகக் கொடுக்காமல், குறிப்பிட்ட விவசாயச் சங்கத்தின் மூலம் கொடுத்திருப்பதால், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இன்னும் இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரி, மற்ற விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குத் தொடுத்தனர்.

சாயக் கழிவுநீர்

பின்னர் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்ப வசூலிக்குமாறு வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், குறிப்பிட்ட விவசாயச் சங்கமும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை உடனடியாகத் திரும்ப வசூலிக்கக் கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது விவசாயிகள் தரப்பு. 

 

நோட்டீஸ்

ஆனால், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையோடு சேர்த்து ஆண்டுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் திரும்ப வசூலிக்குமாறு உத்தரவிட்டது. இல்லையேல், இழப்பீட்டுத் தொகைக்குரிய விவசாய நிலங்களை ஜப்தி செய்யுமாறும் உத்தரவிட்டது. அதற்குப் பிறகும் சில வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இழப்பீடு பெற்ற விவசாயிகளிடம், அந்த இழப்பீட்டுத் தொகையைத் திரும்பச் செலுத்துமாறு வருவாய்த் துறையினர் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் தரப்பில் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தாததால், இழப்பீடு பெற்ற விவசாய நிலங்களை வருவாய் வசூல் சட்டத்தின் மூலமாக ஜப்தி செய்கிறோம் எனச் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் இழப்பீடு பெற்ற விவசாயிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்