போராட்டம் தொடரும் என போக்குவரத்து சங்கங்கள் அறிவிப்பு- அரசு பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்து ஊழியர்களுக்கு மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து சங்கங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

சிஐடியு


இந்நிலையில், இன்று 13-வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்றன. சங்கங்கள் தரப்பில் 2.57 காரணி ஊதிய உயர்வு கேட்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் 2.44 காரணி ஊதிய உயர்வு தரலாம் என்று சொல்லப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு காண முடியாமல் இழுபறி ஏற்பட்டது. அரசின் முடிவை அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையின் போது பாதியிலேயே வெளியேறினார்கள். இதனால், இறுதி முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

போராட்டம்

இதன் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அரசு பஸ்கள் ஓடவில்லை. ஆங்காங்கு ஒன்றிரண்டு பஸ்கள் இயங்கின. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லாததால் போராட்டம் தொடரும் என சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாளை முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்குமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் அரசின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர்கள் பணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயங்கக் கூடும்.
 

அமைச்சர்


பேச்சுவார்த்தைக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “போக்குவரத்து ஊழியர்களுக்கு  2.44 காரணி ஊதிய உயர்வு வழங்க அரசு முன்வந்துள்ளது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.83 கோடி அரசுக்கு கூடுதலாகச் செலவாகும். சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளது. இதை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அரசு மற்றும் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வண்ணம் பணிகளைத் தொடர வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தொழிற்சங்கங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு இருக்காது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!