வெளியிடப்பட்ட நேரம்: 23:35 (04/01/2018)

கடைசி தொடர்பு:18:11 (23/07/2018)

`மெர்சல்' பட பாணியில் நடந்த சோகம்: தவறான சிகிச்சைக்கு பெண் பலி!

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பெண் ஒருவர் தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெய்வாணை

கோவை, பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் கணேசன். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் தெய்வானை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தெய்வானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்தனர். இதனிடையே, இன்று காலை தெய்வானை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையினாலேயே தெய்வானை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தெய்வானையின் உறவினர்கள் கூறுகையில், "அவங்களுக்கு கேன்சர் கட்டி, ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்னு சொல்லித்தான் ட்ரீட்மென்ட் தொடங்கினாங்க. முதல்ல 4 ஊசி போடணும். ஊசிக்கு 30,000 ரூபா ஆகும்ணு சொன்னாங்க. ஊசி போட்டோம். அப்பறம் ஒரு ஆபரேஷன் பண்ணாங்க. கொஞ்ச நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணாங்க.

நாங்க வீட்டுக்குப் போன கொஞ்ச நாள்ல, ஆபரேஷன் பண்ண இடத்துல போட்டுருந்த தையல்ல அவங்களுக்கு, நீர் கசிஞ்சுது. உடனே, பக்கத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்குப் போனோம். அவங்க ஆபரேஷன் பண்ண ஆஸ்பத்திரிக்கே கூப்டு போங்கண்ணு சொன்னாங்க. சரிண்ணு திரும்பி இங்க வந்து கேட்டோம். டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணப்ப கத்தரி பட்டுருக்கும், சில கேஸ்ல அப்படி நடக்கும். இன்னொரு ஆபரேஷன் பண்ணா சரி ஆய்டும்.. உடனடியா அதுக்கு அமெளன்ட் கட்டுங்கனு டாக்டருங்க சொன்னாங்க.

உங்க மேலதான தப்பு.. நாங்க ஏன் காசு கட்டணும்னு சொல்லிக் கேட்டோம். அதுக்கு அப்படித்தான்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. ஆபரேஷன் ஆன இடத்துல, தையல மட்டும் பிரிச்சுட்டு, ஒரு காட்டன போட்டு க்ளோஸ் பண்ணிட்டாங்க. அப்படியேத்தான் 2 நாள் ஆஸ்பத்திரில இருந்துருக்காங்க.

இன்னிக்கு காலைல இறந்தே போய்ட்டாங்க. டாக்டருங்களோட அலட்சியப்போக்குத்தான் உயிரிழப்புக்கு காரணம். இந்தப் பிரச்னைய வெளிக்கொண்டு வரதுக்கு முயற்சி பண்ணப்ப, எங்களை மீறி ஒண்ணும் பண்ண முடியாதுன்னு திமிரா பதில் சொல்றாங்க. போலீஸ விட்டு பணம் வேணுமானு எல்லாம் கேக்கறாங்க. எங்களுக்குத் தேவை இறந்தவங்களோட உயிர்தான். அத இவங்கனால கொடுக்க முடியுமா?" என்றனர்.

தெய்வானையின் உடலை வாங்க மறுத்து, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீஸார் வந்து சமதானப்படுத்திய பிறகே அவர்கள் உடலை வாங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராமகிருஷ்ணா குழும மக்கள் தொடர்பு அதிகாரி உமா மகேஸ்வரனை தொடர்புகொண்டோம். "அவங்க 4-வது ஸ்டேஜ்லதான் வந்தாங்க… அவங்கதான் எங்களை மிரட்டினாங்க என்றவரிடம், மேற்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு, நான் மருத்துவத்துறை இல்ல. எனக்கு இதப்பத்தி தெரியாது" என்றார்.