வெளியிடப்பட்ட நேரம்: 23:51 (04/01/2018)

கடைசி தொடர்பு:08:24 (05/01/2018)

காங்கேயத்தில் அதிர்ச்சி சம்பவம்: வீட்டில் தனியாக இருந்த தம்பதி படுகொலை!

காங்கேயம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் சூலக்கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கண்ணம்மாள். இத்தம்பதியர் காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட நீலக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் உள்ள அவர்களது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்தனர். இவர்களது மகன் பெரியசாமி மற்றும் மகள் ஜோதிலட்சுமி இருவரும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் காங்கேயத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று வழக்கம்போல பழனிச்சாமியின் தோட்டத்து வீட்டுக்குச் சென்ற பால்காரர் சிதம்பரம், அங்கு பழனிச்சாமியும் அவரது மனைவி கண்ணம்மாளும் ரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் அக்கம்பக்கத்தினரிடன் தகவல் தெரிவித்த அவர், பழனிச்சாமியின் மகன் பெரியசாமிக்கும் செல்போனில் அழைத்து தகவலை தெரிவித்திருக்கிறார்.
 

அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டுவருகிறது. போலீஸாரின் விசாரணையில், கொலை நடைபெறுவதற்கு முன்பாக பழனிச்சாமி, வீட்டின் வெளிப்புறத்தில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை கொலை வெறியுடன் தாக்கியதாகவும், கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மனைவி கண்ணம்மாளையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிக் கொலை செய்ததாகவும் தெரிகிறது. மேலும், கொலை நடைபெற்ற வீட்டில் மர்ம நபர்கள் திருட்டுச் சம்பவங்களில் எதுவும் ஈடுபடாததால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.