வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:03:16 (05/01/2018)

வரலாற்று நாயகன் ராபர்ட் புரூஸ் ஃபூட்..! நூல்வெளியீட்டு விழாவில் பெருமிதம்

இந்தியாவின் பழங்கால வரலாற்றின் தந்தை என்று புகழப்பட்டவர் ராபர்ட் புரூஸ் ஃபூட். இவர் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வாழ்ந்தார். இவரது கல்லறையும், இவரது குடும்பத்தினர் கல்லறையும் ஏற்காட்டில் இன்றும் நினைவு சின்னமாக இருந்து வருகிறது. அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏற்காடு அறிவியல் எழுத்தாளர் இளங்கோ,  ராபர்ட் புரூஸ் ஃபூட் வரலாற்றை தன்னுடைய 85-வது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழா ராபர்ட் புரூஸ் ஃபூட் கல்லறையில் நடைப்பெற்றது. இந்நூலை அருட்தந்தை பென்னட் வால்டர் வெளியிட அருட்சகோ.சூசை அலங்காரம் பெற்றுக் கொண்டார். இதில் ஊட்டி கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் ராஜ், கார்திக், பிலியூர் ராமகிருஷ்ணன் போன்ற வரலாற்று ஆய்வாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏற்காடு அறிவியல் எழுத்தாளர் இளங்கோ, '' ராபர்ட் புரூஸ் ஃபூட்  செப்டம்பர் 23, 1834ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்டன்ஹாம் என்ற ஊரில் பிறந்தார். தனது 24ம் வயதில் சென்னையில் இந்திய புவியியல் அளவைத் துறையில் நிலவியலாளராக பணியில் சேர்ந்தார். இவர் 1863ம் ஆண்டு மே 30 அன்று சென்னைக்கு அருகில் பல்லாவரம் பகுதியில் உள்ள திரிசூலம் மலைப்பகுதியில் கல் கோடாரி ஒன்றை கண்டுபிடித்தார்.

அதன் பின்னர் செப்டம்பர் 28, 1863ம் ஆண்டு ஆத்திரபாக்கம், கொற்றலை ஆற்றுப் படுக்கையில் முதுமக்கள் தாழி, பானைகள், கற்கால வெட்டுக் கருவிகளை கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கருவிகளை ஹோமோ எரக்டஸ் என்னும் மனித இனம் பயன்படுத்தியதாக தெரிய வருகிறது. இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பு பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்திய துணைக் கண்டத்திலும் இருந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

ராபர்ட் புரூஸ் ஃபூட் 1884ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில்  3.5 கி.மீட்டர் நீளமுள்ள பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இது இந்தியாவில் உள்ள இரண்டாவது நீளமான குகையாகும். இவர் 42 ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்துக் கொள்ள உதவுகிறது. இவர் கண்டுபிடித்த கற்கருவிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் 1904ம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகம் எடுத்து காட்சிக்கு வைத்துள்ளது. இவர் கற்கருவிகள் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிந்து 150வது ஆண்டு தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராபர்ட் புருஸ்ஃபூட் சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஐவி காட்டேஜ் என்னும் வீட்டில் வாழ்ந்தார். இவர் டிசம்பர் 29, 1912ம் ஆண்டு இறந்தார். இவரின் கல்லறை ஏற்காட்டில் ஹோலி டிரினட்டி சர்ச்சில் உள்ளது. இவரது கல்லறையை ஒட்டி இவரது மனைவி, மாமனார், குழந்தை கல்லறைகளும் இருக்கிறது. இந்தியாவின் பழங்கால வரலாற்றுத் தந்தை ராபர்ட் புரூஸ் ஃபூட் ஏற்காட்டில் வாழ்ந்தார் என்பது ஏற்காட்டிற்கு பெருமையானது'' என்றார்.