வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (05/01/2018)

கடைசி தொடர்பு:03:30 (05/01/2018)

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும்! - மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த திருப்பூர் எம்.பி

டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை நேரில் சந்தித்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்த மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவை என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மாநிலம் முழுவதும் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில்பெருந்துறையும் ஒன்று.

தற்போதுபெருந்துறையில் 327 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் வெகு சுலபமாக வந்துசேரும் வகையில் இந்த இடம் அமைந்திருக்கிறது. பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்பட்சத்தில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பயன்பெற முடியும். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா பகுதி மக்களும் மருத்துவ வசதிகளைப் பெற வாய்ப்பாக அமையும். மருத்துவ வசதிகளுக்கான தேவை அதிகரித்து வரும் இக்காலத்தில், உயர்தர மருத்துவ வசதிகள்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைந்தால் கொங்கு மண்டல மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே வரவிருக்கும்குடியரசு தின விழாவையொட்டி, எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.