”தாக்கப்பட்ட தலித் இளைஞர்கள் மீதே வழக்குபோடுவதா?”- தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆவேசம்

தலித்

பட்டுக்கோட்டையில் தலித்  மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்; அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா. வைகறை கோரிக்கைவிடுத்துள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பட்டுக்கோட்டை அருகில் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் வீதியில், 60 வீடுகள் உள்ளன. கடந்த 2017 டிசம்பர் 31 இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், பகுதி இளைஞர்கள் ஒலிபெருக்கி வைத்து கொண்டாடியுள்ளனர். தெற்கு குடிகாடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வடக்கு ஆம்பலாப்பட்டு பகுதியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரு சக்கர ஊர்திகளில் வந்துள்ளனர்.

அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்துவிட்டு, சாதிப் பெயரை சொல்லி “உங்களுக்கு ஏண்டா புத்தாண்டு?” என்று, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். கைகலப்பும் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்து சென்ற வடக்கு ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் சிறிது நேரத்தில் வாகனங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கையில் இரும்புக் குழாய், உருட்டுக் கட்டைகள் எடுத்துக் கொண்டு, தலித் மக்கள் வசிக்கும் தெருவுக்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தாக்குதல் நடத்திய அனைவர் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக, அரசு சார்பில் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞர்கள் மீது எந்தவித பொய் வழக்கும் போடக்கூடாது. அனைத்து சாதி மக்களையும் இணக்கப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!