வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (05/01/2018)

கடைசி தொடர்பு:08:42 (05/01/2018)

ஒகி புயலில் பலியான தூத்துக்குடி மீனவர் உடல் அடக்கம்! உறவினர்கள் கண்ணீ்ர்

ஒகி புயல் தாக்குதலில் சிக்கி மாயமான தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் கனிஸ்டனின் உடல் மீட்கப்பட்டு கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ.பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டது.  அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கனிஸ்டனின் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

kanistanதூத்துக்குடியில் விசைப்படகுகளுக்கு தங்குகடல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த ஜெகன், ஜோசப், ரவீந்திரன், கனிஸ்டன், ஜூடு மற்றும் ஜூடுவின் மகன் பாரத் ஆகிய 6 மீனவர்களும் மற்றும் கன்னியாகுமரி, முட்டம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்களும் இணைந்து குளச்சல் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒகி புயலின் தாக்குதலில் மீனவர்கள் மாயமாயினர். இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர் ஜெகன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். சில நாள்களுக்குப்பிறகு ஜூடுவின் உடல் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   

படகில் சென்ற மீதமுள்ள 4 மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கேரள மாநில கடலோரப் பகுதியில் சிதைந்த நிலையில் பல உடல்கள் மீட்கப்பட்டன. இதில், கோழிகோடு அரசு மருத்துவமனையில் நடந்த டி.என்.ஏ பரிசோதனையில் மீனவர் கனிஸ்டனின் உடல் அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து கனிஸ்டனின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

fisherman kanistan

தொடர்ந்து, அவரது உடல் கோழிக்கோட்டில் இருந்து ஆம்புலன்ஸில் தூத்துக்குடிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கனிஸ்டனின் உடலைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் அப்பகுதி மீனவர்கள் கதறி அழுதனர். அனைவரது அஞ்சலிக்குப் பின், தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மயானத்தில் கனிஸ்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 3 மீனவர்களின் நிலை என்ன ஆனது என்பதுகுறித்து தெரியவில்லை. அவர்களையும் மீட்டுத் தரக்கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க