பச்சிளம் குழந்தை பாழும் கிணற்றில் வீசிக் கொலை! -மனிதாபிமானமற்ற கொலையாளிக்கு வலைவீச்சு!

நெல்லை மாவட்டத்தில், பிறந்து 4 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை பாழும் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனிதாபிமானமற்ற இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

குழந்தை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், விவசாயியான இவருக்குச் சொந்தமான நிலம் வடக்குப் புதூர் பகுதியில் இருக்கிறது. சிவசுப்பிரமணியன் விவசாயப் பணிக்காக தோட்டத்துக்குச் சென்றபோது அங்குள்ள கிணற்றுக்குள் ஒரு குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுபற்றி வடக்குப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் பவானிக்கு அவர் தகவல் கொடுத்தார். கிராம நிர்வாக அலுவலர் கிணற்றுக்கு வந்து பார்த்துவிட்டு சங்கரன்கோவில் தாலுகா போலீஸில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் மிதந்த குழந்தையின் உடலை வெளியே எடுத்துவந்தனர். 

குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அந்தக் குழந்தை பிறந்து 4 நாள்களே ஆகியிருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தையை கிணற்றில் வீசக் காரணம் என்ன என்பது பற்றியும் அதை வீசிய நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பச்சிளம் குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் கிணற்றில் வீசிக் கொன்ற நபர்களின் கொடூரச் செயல்குறித்து அப்பகுதி மக்கள் விமர்சித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!