விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம்! குமரி தி.மு.க எச்சரிக்கை

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என நாகர்கோவில் எம்.எல்.ஏ.சுரேஷ்ராஜன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி குமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் விவசாயிகள்  தங்கள் விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் முழுமையாக இழந்து நிற்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு எந்த நிவாரணமும் வழங்காமல் அலட்சியமாக இருக்கிறது. அதனால், விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கான செலவுக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்கள்.

அதுபோல விவசாயத்துக்காக வாங்கிய வங்கிக் கடன்களையும் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளின் கடன்களை உடனே செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கின்றன. ஒகி பேரிடர் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால்  விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடன்களை அடைக்க கால அவகாசத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்தால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி தி.மு.க சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!