வெளியிடப்பட்ட நேரம்: 02:33 (05/01/2018)

கடைசி தொடர்பு:07:46 (05/01/2018)

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

கோயம்பேடு

ற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து சங்கத்தினரின் நீண்டகால கோரிக்கையாகவுள்ளது. இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், நேற்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முடிவில் 2.44 சதவிகித ஊதிய உயர்வு வழங்கும் அரசின் முடிவுக்கு, அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன. ஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அதனால் இச்சங்கத்தினர் உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அருகிலுள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் நேற்று இரவு தமிழகம் முழுக்க பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

கோயம்பேடு

இந்நிலையில், இரவு நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் தற்போது ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஒன்றிரண்டு புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வழக்கம்போல இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் பேருந்து நிலையத்துக்குள்ளேயே படுத்து உறங்கிக்கொண்டிருக்கின்றனர். சில வெளியூர் பயணிகள் திட்டமிட்டப்படி தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில போக்குவரத்துச் சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்தால், பகல் நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.