வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:07:43 (05/01/2018)

’5 மாதமாக சம்பளம் இல்லை!’- கொந்தளிக்கும் ஆதி திராவிட விடுதி துப்புரவுப் பணியாளர்கள்!

ஆதி திராவிட விடுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்பத்தை நடத்த முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாக குமுறுகின்றனர்.

சம்பளம் கேட்கும் ஊழியர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளில் பணியாற்றுவதற்காக கடந்த 2012-ம் வருடம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக தற்காலிகமாக துப்புரவுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தற்காலிக ஊதியமாக மாதத்துக்கு ரூ.2,000 மட்டும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த பணியானது அரசால் நிரந்தரமாக்கப்படக் கூடும் என்கிற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான பணியாளர்கள் இந்த வேலையைச் செய்துவந்தனர். 

ஆனால், இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததுடன், சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. அதனால் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்திவந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் உள்ள 6 மாத காலமாக, ஏற்கெனவே வழங்கப்பட்ட மாதச் சம்பளமும் வழங்கப்படவில்லை. 6 மாத காலமாக தங்களுடைய சொற்பச் சம்பளமும் வழங்கப்படாததால் துப்புரவுப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் குடும்பத்தை நடத்த வழியின்றி உள்ளனர். 

தங்களின் நிலைமை குறித்து ஆதி திராவிட நலத்துறை அமைச்சரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், சம்பளம் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஊழியர்களில் சிலர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். தங்களுக்கு நிலுவைச் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் காலமுறை ஊதியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.