காலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்.. மாலையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்  - திணறிய புதுக்கோட்டை பேருந்து நிலையம்

புதுக்கோட்டை நகர புதிய பேருந்து நிலையம் இரண்டு திடீர் விஷயங்களால் இன்று திணறியது. காலை ஒன்பது மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைத்துத் தரப்பினரும் பேருந்துநிலையத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கிட்டதட்ட ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வளவு பேரையும் கைதுசெய்து, அருகில் உள்ள ஆயுதப்படை விடுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்கவைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

இந்த பிரச்னை முடிந்து ஆறுமணி நேரம் கழித்து அடுத்தப் பிரச்னை ஆரம்பித்தது. ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பேருந்துகள் இயங்கவில்லை. இதன் பாதிப்பு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உடனடியாக தெரிந்தது. பேச்சுவார்த்தையின் போக்கை உடனுக்குடன் தெரிந்துகொண்ட மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் வேலை நிறுத்தத்துக்கு தயாராக இருந்தனர்.

மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து வந்த தகவலையடுத்து, மின்னல் வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தத் திடீர் வேலை நிறுத்தத்தால், புதுக்கோட்டைக்கு வந்த கிராம மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். பாஸ் எடுத்து அரசுப் பேருந்தை மட்டுமே நம்பி பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் இரவு எட்டு மணி வரைநிரம்பி வழிந்த பயணிகளால் மீண்டும் பேருந்து நிலையம் திணறியது. புத்திசாலியான மாணவ மாணவிகள் அருகில் உள்ள டீக்கடைகளில் மொபைல் போன்வாங்கி, தங்கள் அப்பா, அம்மா, சகோதரர்களுக்கு போன் செய்து தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திலேயே அவர்களது உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் சென்றார்கள்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்குபேர்களை ஏற்றிக்கொண்டு விரைந்த அந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்துக் காவலர்கள் கண்டும் காணாமல் இருந்ததோடு, 'கவனமா போங்கப்பா' என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததை இன்று பார்க்க முடிந்தது. அதே சமயம் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு எதிராக மக்கள் எரிச்சலுடன் முனுமுனுப்பதையும் கேட்க முடிந்தது. "அமைச்சர்களுக்கும் அதிகாரிகளும் சொகுசான காரில் போறாங்க.. வர்றாங்க. நாம படுற கஷ்டம் அவங்களுக்கு என்ன தெரியும். அவங்களும் இந்த பஸ்ல நெருக்கியடித்து போய்வந்தாதான் தெரியும்" என்றவர்கள், போக்குவரத்து ஊழியர்களையும் விடவில்லை. "இப்படி திடுதிப்புன்னு மக்களை 'அலங்க மலங்க' அடிச்சுதான் சம்பளத்தை உயர்த்திக் கேட்கணுமா?" என்று கொந்தளித்தார்கள்.

அதேசமயம் தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்குப் பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருந்தன. நகரப் பேருந்துகள் சுத்தமாக இயங்கவில்லை. இப்படி காலையில் கட்டுமானத்தொழிலாளர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த புதிய பேருந்து நிலையம், மாலையில் தொடங்கிய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை திணறிவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!