விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை உயர்த்த வேண்டும்! குமரியில் 4-வது நாளாகத் தொடரும் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தொடர் சத்தியாகிரகப் போராட்டம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தக்கலை அருகில் உள்ள புலியூர் குறிச்சியில் தொடங்கியது. ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பிரதமர்  வரை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்துவிட்டு போன பிறகும் இன்னும் உரிய நிவாரணங்கள், இழப்பீடுகள் முறையாக மக்களுக்கு கிடைக்கவில்லை.

 

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அதுபோல அரசு வேலை உட்பட அனைத்து  நல உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும். சாலை, வீடுகள் சீரமைப்பு, கடலில் காணாமல் போன மீனவர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தையும் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. இந்தப் போராட்டத்தை விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திவருகிறார்கள். பத்பநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

மூன்றாவது நாளான நேற்று சத்தியாகிரகப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்,  இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் நான்காவது நாளாக மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. போராட்டப் பந்தலில் படுத்து உறங்கி போராட்டத்தைத் தொடர்கிறார். இந்தப் போராட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!