வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:07:00 (05/01/2018)

தூத்துக்குடியில் அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம்  புதூரில் அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றி வந்ததாக 2 லாரிகள் மற்றும் பூசனூர் வைப்பாற்றுப் படுகையில் சட்டவிரோதமாக அள்ளிவைக்கப்பட்டிருந்த 100 மணல் மூட்டைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 truck seized in pithur

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம்  தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு அடுத்தபடியாக விளாத்திகுளம் வைப்பாறு பகுதியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. ஆற்றுப்பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையால் மணல் அள்ளுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கடந்த மாதம் விளாத்திகுளம் அருகிலுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் பண்ணைக்குட்டை அமைப்பதாகச் சொல்லி மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்படி கிராம மக்களின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் மணல் தோண்டுவது நிறுத்தப்பட்டது.  இருப்பினும் இப்பகுதிகளில் அனுமதியின்றி  மூட்டைகளில் மணல் அள்ளப்பட்டு ரகசியமாக கொண்டுசெல்லப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், விளாத்திகுளம் அருகிலுள்ள புதூர் சுற்றுவட்டார கிராமங்கள் வழியாக ஆற்றுமணல் கடத்தல் நடைபெறுவதாக விளாத்திகுளம் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வட்டாட்சியர் லிங்கராஜ் தலைமையில் அதிகாரிகள்  புதூர் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது புதூரில் சில இடங்களில் ஆற்று மணலை இறக்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்று தணிக்கை செய்தனர். தணிக்கையின்போது சவுடு மண் அள்ளிச்செல்வதற்கான அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலிருந்து சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. 

100 river sand badges are seized

 இதையடுத்து, பிடிபட்ட 2 லாரிகளில் இருப்பில் இருந்த தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் மணலுடன் லாரிகளைப் பறிமுதல் செய்து புதூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து  வைப்பாற்று படுகையோர கிராமங்களில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது பூசனூர் கிராம வைப்பாற்றுப் பகுதியில் 100 சிமென்ட் மூட்டைகளில் சுமார் 50 கிலோ  எடையில் மணல் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  உடனடியாக அவற்றை கைப்பற்றி ஆற்றுப் படுகையில் கொட்டினர். இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க