வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (05/01/2018)

கடைசி தொடர்பு:09:01 (05/01/2018)

பாம்பன் பாலத்தைக் கடந்த கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி இந்தியக் கடலோரக் காவல்படை சோதனை!

பாம்பன் பாலத்தைக் கடந்துசென்ற 2 இழுவைக் கப்பல்களில், இந்திய கடலோரக் காவல் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்களில் சோதனை


குஜராத் மாநிலம் சிக்காவிலிருந்து ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் நோக்கிச் சென்ற இழுவைக் கப்பல் ஒன்று, பாம்பன் தூக்கு பாலத்தைக் கடந்துசென்றது. இதேபோல, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து மும்பைக்குச் சென்ற மற்றொரு இழுவைக் கப்பலும் பாம்பன் தூக்குபாலத்தைக் கடந்துசென்றது. 

வழக்கமாக, பாம்பன் தூக்குபாலத்தைக் கடந்துசெல்லும்நிலையில் உள்ள கப்பலின் ஆவணங்களை பாம்பன் துறைமுக அதிகாரிகள் ஆய்வுசெய்த பின்னர், பாலத்தைக் கடந்துசெல்ல அனுமதி வழங்குவர். இந்நிலையில், பாலத்தைக் கடந்துசென்ற இரண்டு கப்பல்களையும் இந்திய கடலோரக் காவல் படையினர் நடுக்கடலில் நிறுத்தி கப்பல்களின் ஆவணங்களைச் சரிபார்த்ததுடன், கப்பல்  முழுவதும் திடீர் சோதனை நடத்தினர்.

பாதுகாப்பு காரணத்துக்காகவும் கப்பலில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரும் ஊடுருவல் செய்கின்றனரா என்பதுகுறித்தும் சோதனை நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.