அதிகரிக்கும் மணல் கொள்ளை! - கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா தெ.புதுக்கோட்டையில் பிராமணக்குறிச்சி கால்வாய்க் கரையை உடைத்து, வைகைக் கரையில் மணல் கொள்ளை அமோகமாக நடந்துவருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், மானாமதுரையில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்  கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா, மாவட்டக்குழு உறுப்பினர் முனியராஜ், நகரச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், “மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையில், வைகை ஆற்றிலிருந்து பிராமணக்குறிச்சி, நெட்டூருக்குச் செல்கிற கால்வாய்கள் உள்ளன. இக்கால்வாய்களில், பிராமணக்குறிச்சி கால்வாய் கரைகளை உடைத்திருக்கிறார்கள். உடைக்கப்பட்ட கால்வாய் மற்றும் தெ.புதுக்கோட்டை கண்மாய்க் கரையில் லாரி செல்லும் அளவுக்கு பாதை அமைத்துள்ளனர். இந்தப் பாதையில் லாரிகள்மூலம் மணல் அள்ளப்பட்டிருக்கிறது.10 அடி ஆழத்துக்கு மணல்கொள்ளை நடந்துவருகிறது.

வைகைக் கரையில் மணல் அள்ளி விற்பனை நடந்துவருகிறது. சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். மணல் அள்ளிய கும்பல்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகைக் கரையில் ஆற்றுமணல் போன்று மணல் கிடைப்பதால், மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. அண்மையில் மணல் அள்ள முற்பட்ட கும்பலை கிராம மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து, காவல்துறை வசம் ஒப்படைத்தனர். ஆனால், காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டனர். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வைகைக் கரை ஒரங்களில் சவடு மணல் அள்ளுகிற பெயரில் மணல் அள்ளப்படுவதையும் தடுப்பதற்கு காவல்துறையும் வருவாய்த்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!