வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (05/01/2018)

கடைசி தொடர்பு:19:49 (05/01/2018)

தற்காலிக ஊழியர்களைக்கொண்டு பேருந்துகள் இயக்கப்படும்..! அமைச்சர் விஜயபாஸ்கர்; #liveupdates

ஆளுங்கட்சி உட்பட அனைத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட ஒருமித்த போராட்டம்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து நேற்று போக்குவரத்து தொழிலாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. சிவகங்கையில் நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆளுங்கட்சி உட்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

bus strike

சிவகங்கை பணிமனையிலிருந்து மொத்தம் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக மூன்று அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கியது.அரசுப் பேருந்துகள் வருகை இல்லாததால் சிவகங்கை பேருந்துநிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.தொழிலாளர்கள் அனைவரும் காலை முதலே சிவகங்கை பணிமனையின் முன் நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

bus strike

"இந்த அரசு தொடர்ந்து எங்களை வஞ்சித்து வருகிறது.எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் அடுத்தகட்டமாக நாங்கள் எங்கள் குடும்பங்களுடன் வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்கின்றனர் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள்

தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்குறித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊதியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள்மூலம் பேருந்துகள் இயக்கப்படும். 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொழிலாளர்கள், 2.57 காரணி ஊதிய உயர்வு கேட்டார்கள். அவர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இருப்பினும், தொ.மு.ச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அவர்கள், தொழிலாளர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்' என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதையடுத்து, சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், நேற்று மாலை முதலே வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் இயக்கம் தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர்.

அண்ணா தொழிற்சங்க ஊழியர்களைக்கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இருப்பினும், இன்று காலை, சென்னையில் 40 சதவிகித பேருந்துகளே இயங்குகின்றன. சென்னை கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பிராட்வே ஆகிய முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து குறைவான பேருந்துகளே புறப்பட்டன. அதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பேருந்து நிறுத்தங்களில், பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, திருச்சி, கரூர், காரைக்குடி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படவில்லை. இன்று காலை 10 மணி அளவில், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

பேருந்துகள் இல்லாமல் காட்சியளிக்கும் தேனி பழைய பேருந்து நிலையம். காத்திருக்கும் பயணிகள். 

அரசுப் பேருந்துகள் இயங்காமல் வெறிச்சோடிக்கிடக்கும் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்

 


போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஸ்ட்ரைக்கால், நேற்று இரவு முதலே கோவை மக்கள் கடும் அவதியைச் சந்தித்துவருகின்றனர். காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் மற்றும் சாய்பாபா கோயில், புது பஸ் ஸ்டாண்ட் என அனைத்து பேருந்து நிலையங்களிலும் மிகக் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 கோவை மண்டலத்தைத் தவிர, மற்ற மண்டலப் பேருந்துகளே குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, தனியார் ஆம்னி பஸ்கள், கோவையின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் கல்லாகட்டிவருகின்றன.

அரசுப் பேருந்துகள், பெரும்பாலும் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பணிமனைகள் முன்பு, ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க