பிரதமருக்கு கிரண்பேடி அவசர கடிதம்! - கலக்கத்தில் புதுச்சேரி அரசு

”முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர் மாளிகைக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள்” என்று பிரதமர் மோடிக்கு கிரண்பேடி எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரண்பேடி

புதுச்சேரியில், மக்கள் நலத் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதாக, முதலமைச்சர் நாராயணசாமியும் அமைச்சர்களும் ஆளுநர் கிரண்பேடிமீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவருகின்றனர். இந்நிலையில்தான், பிரதமர் மோடிக்கு கிரண்பேடி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கடிதத்தில், “புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் தங்களைச் சந்தித்தாக செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்துகொண்டேன். அப்போது, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகத் தங்களிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. முதலமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள், ஆளுநர் மாளிகைதான் நலத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கிறது என்ற தவறான தகவலை பத்திரிகைகள் வாயிலாகவும், பொது மேடைகள் மூலமும் தெரிவித்துவருகின்றனர். அது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அவர்கள் தெரிவிப்பது பொய் என்பதை ஆதாரங்கள் எடுத்துக் காட்டும்.

இலவச அரிசி வழங்குவது தொடர்பான கோப்பு, கடந்த ஏப்ரல் மாதம் என்னிடம் வந்தது. அதற்கு ஒப்புதல் வழங்கியதோடு, ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்றும், வருவாய் அதிகம் உள்ளவர்களை நீக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி அறிவுறுத்தியிருந்தேன். அதேபோல, கடந்த மே மாதம் மீண்டும் இலவச அரிசி தொடர்பான கோப்பு என்னிடம் வந்தது. அதற்கும் அனுமதி கொடுத்து, ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்தவற்றை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தினேன். மீண்டும், ஜூன் மாதமும் அரிசிக்கான கோப்பு வந்தது. அதற்கும் அனுமதி கொடுத்ததோடு, பொதுமக்களின் நிதியை வீணாக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தேன். முதியோர் ஓய்வூதியத்துக்கான கோப்புகளைப் பொறுத்தவரை உடனுக்குடன் அனுமதி வழங்கினேன். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வந்த ஓய்வூதியக் கோப்புகளில் அன்றைய தினத்திலேயே ஒப்புதல் அளித்தேன். அதில், மொத்தம் 1.44 பயனாளிகள் இருக்கின்றனர். அந்தக் கோப்புகளில் எந்தக் குறிப்பையும் நான் எழுதவில்லை.   

நாராயணசாமி

தீபாவளியை முன்னிட்டு, இலவச சர்க்கரை வழங்குவதற்காகத் தனியார் ஆலைகளிடமிருந்து எந்தவித டெண்டரும் பெறாமல், அரசு சர்க்கரை வாங்குவது தொடர்பான கோப்பு, கடந்த 2017 அக்டோபர் மாதம் என்னிடம் வந்தது. அப்போது, இந்தக் கோப்பு சட்ட விதிகளுக்கு எதிராக உள்ளது. மேலும் நிதித்துறையும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், முறைப்படி சரிசெய்து விதிகளின்படி கோப்பை அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டிருந்தேன். அதன்பிறகு, அந்தக் கோப்பு மீண்டும் என்னிடம் வரவே இல்லை. அதேபோல, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசின் கேந்த்ரிய பந்தர் துறையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அதேபோல ஆதிதிராவிடர்களுக்கான நிதியை மாற்றி 6 கோடி ரூபாய் செலவில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க செயலருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஏழைகளுக்குப் பயன்படுமாறு செலவுசெய்ய வேண்டும் என்றே ஆளுநர் மாளிகை வலியுறுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!