பேருந்துகள் இயங்காததால் நெல்லையில் பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தால் பேருந்துகள் இயக்கப்படாததால், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 4-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்துகள் இயங்கவில்லை. அதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளுக்குச் செல்பவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். 

நெல்லையில் அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயங்குகின்றன. அதனால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பேருந்துகள் கிடைக்காததால் வயதானவர்களும் பெண்களும் ஆட்டோவை நம்பி பயணம் செய்யும் நிலைமை உருவாகி இருக்கிறது. காலையில் அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடந்தது வேதனையளிப்பதாக உள்ளது.

இந்த நிலையில், அரசுப் பேருந்துகள் இயங்காததால் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக பல்கலைக் கழகப் பதிவாளர் பெ.கோவிந்தராஜூ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் (5 மற்றும் 6-ம் தேதிகளில்) நடைபெறவிருந்த ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!