வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (05/01/2018)

கடைசி தொடர்பு:10:59 (05/01/2018)

`95% பஸ்கள் ஓடவில்லை!' - முடங்கிப்போன மாவட்டம்; அல்லல்படும் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில், தனியார் பேருந்துகள் குறைவாக உள்ள நிலையில்,  95 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

அரசு பேரூந்து இயக்கப்படாததால் வெறிச்சோடி கிடக்கும் ராமேஸ்வரம் பேரூந்து நிலையம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி என 6 இடங்களில் அரசு போக்குவரத்துப் பணிமனைகள் உள்ளன. இந்த 6 பணிமனைகள்மூலம் மாவட்டத்துக்குள்ளும், வெளிமாவட்டங்களுக்கும் சுமார் 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்றிரவு முதல் ஊதிய உயர்வு கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்து முடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் நேற்றிரவு முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், ராமநாதபுரம், ராமேஸ்வரம் பேரூந்து நிலையங்கள் வெறிச்சோடிக்கிடந்தன.

பேருந்து


இன்று காலை பேருந்துப் போக்குவரத்து சீராகிவிடும் என நினைத்து, வந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் 350 பேருந்துகளில், அண்ணா தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் சிலரைக் கொண்டு 10 -க்கும்  குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவே தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், வெளியூரில் பணிக்குச் செல்லவேண்டியவர்கள், பள்ளி செல்லவேண்டிய மாணவ மாணவிகள், ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எனப் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.