மருத்துவ வரலாற்றில் இன்று கறுப்பு தினம்! - மருத்துவர்கள் ஆவேசம்

doctors protest

சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற பிற மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள், பிரிட்ஜ் என்னும் குறுகிய காலப் படிப்புமூலம் அலோபதி மருத்துவர்களாக அங்கீகரிப்பது, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, வேறு புதிய குழுக்களை அமைப்பது போன்ற அம்சங்கள் அடங்கிய தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2017-ஐ எதிர்த்து, நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை  ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில், மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்குபெற்றனர். மேலும், தனியார் மருத்துவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

'இன்றைய தினம், மருத்துவ வரலாற்றில் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தச் சட்டம், மருத்துவ சேவையின் தனித் தன்மையை அழிக்கிறது. இதனால், மருத்துவக் கல்வியின் தரம் தாழக்கூடும். மருத்துவக் கல்வியை நிர்வகிக்க, மருத்துவர் அல்லாத தேசிய மருத்துவர் ஆணையம் என்பது, சட்டம் படிக்காதவர்களை நீதிபதிகளாக நியமித்து நீதி வழங்கச் சொல்வதுபோல உள்ளது' என போராட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர்கள் கூறினர். மேலும், மத்திய அரசு இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு செவிசாய்க்காவிட்டால், தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால், இன்று மருத்துவமனையின் அவசர சிகிச்சை, பிரசவம் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு மட்டுமே இயங்கும் எனக் கூறியுள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!