வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (05/01/2018)

கடைசி தொடர்பு:18:29 (05/01/2018)

"ஜல்லிக்கட்டு எங்க ரத்தத்துலேயே ஊறிய விஷயம்".. காளைகளைக் கொஞ்சும் அலங்காநல்லூர்!

jallikattu, ஜல்லிக்கட்டு

மிழ்நாட்டில் பரவலாக பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், அதன் வேகமும், வீச்சும் துள்ளிக்குதிப்பது 'தூங்காநகர'மான மதுரையில்தான். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், கன்றுமாணிக்கம், சிராவயல், அரளிப்பாறை என மதுரை  மற்றும் பிற மாவட்ட மண்ணில் 'வாடிவாசல்' கம்புகள் எங்கு நடப்பட்டாலும் அதன் கொண்டாட்டங்களைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். சலம்பல் செய்யும் காளைகளை, அலம்பலாகப் பிடிக்கும் மதுரை இளசுகளின் வீரத்துக்கு ராயல் சல்யூட் வைக்கலாம். இந்த பாரம்பர்ய சிறப்புதான் 'தைப்புரட்சி'க்கு வித்திட்டது. மெரினா முதல் குமரி வரை இளைஞர்களை கொம்பு சீவி களத்தில் இறக்கிவிட்டது இந்த ஜல்லிக்கட்டுதான். உருமி மேளம், எக்காறை, பறையடி முழக்கங்களுடன் திமிறி எழும் காளைகளும், அவற்றை அடக்குவதற்காக களம் குதிக்கும் மாடுபிடி வீரர்களுமாக தயாராகி வரும் அலங்காநல்லூருக்கு மதுரையில் இருந்து பஸ் பிடித்தோம்.... 

பொங்கல் - கரும்பு வாசனை, காளைகளும் - காளையர்களுக்குமான முட்டல், மோதல்கள் என ஆரம்பித்திலேயே அதகளப்பட்டது அலங்காநல்லூர். கடந்த மூன்று வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற எதிர்பார்ப்புக்கு பின்னர், எந்தத் தடைகளுக்கும் தயங்காமல் தயாராகி வருகிறது அலங்காநல்லூரின் ஜல்லிக்கட்டுத் திருவிழா. அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுக் கமிட்டியின் முன்னாள் தலைவர் கோவிந்தராஜிடம் பேசினோம், "ஜல்லிக்கட்டு எங்க ரத்தத்துலேயே ஊறிய விஷயம். இங்க ஜல்லிக்கட்டு நடத்த எங்க ஊரு முத்தாலம்மன்தான் அச்சாணி. மார்கழி மாசம் முதல் தேதி தொட்டு எங்க ஊரு மொத்தமும் சாமிக்கு விரதம் இருப்போம். மாட்டுப் பொங்கல் அன்னைக்கு காளை, வண்டி மாடு, பசு மாடுங்கன்னு எங்க வளர்ப்புப் பிள்ளைங்களை வச்சு சாமி கும்பிடுவோம். வெளியாட்களைப் பொறுத்தவரைக்கும் ஜல்லிக்கட்டு ஒருநாள் விழா. ஆனால், அது எங்க பல நாள் உழைப்பு. சேட்டை செய்யுற பிள்ளையைச் செல்லம் கொடுத்து வளர்க்கிற மாதிரிதான் எங்க ஊரோட ஒவ்வொரு வீட்டுலேயும் காளைகளை வளர்க்குறோம்", என்றவரின் அருகில் சிலிர்த்துக்கொண்ட காளையை மழலைக் குரலில் குழந்தை ஒன்று அதட்ட, அதனிடம் பவ்யம் காட்டுகிறது காளை. 

ஜல்லிக்கட்டு, jallikattu

சற்று தூரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாடுபிடி வீரர்களிடம் சென்றோம். வியர்வையுடன் உற்சாகமாக பேச ஆரம்பித்த இளைஞர் ஒருவர், "ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாசம் முன்ன இருந்தே தினமும் காலையில நடைபிடிப்போம். காளைகள அரை மணி நேரம் மண்குத்த விடுவோம். அணை மரம் வழியா காளையை விட்டு வாடி வாசலுக்குப் பழக்குவோம். வாரத்துல ரெண்டு நாள் நீச்சல் பயிற்சி கொடுப்போம். பொதுவா நாலு பல்லு முளைச்சிட்ட காளை, ஜல்லிக்கட்டுக்குத் தயார். புண்ணாக்கு, பாசிதூசி, பட்டி விதை, வாழைப்பழம்,  பருத்திவிதை, சோளம், குருணை, கத்திரிக்காய் இவைதான் காளைகளோட சத்தான ஆகாரம். ஜல்லிக்கட்டுக்கு ஒரு வாரம் முன்னாடியே காளை களத்துக்கு பழகிடும். எங்க ஊர்ல தெருவுக்கு பத்து மாடுபிடி வீரர்கள் இருக்கோம். காளைகளுக்குப் பயிற்சி கொடுக்கும்போதே நாங்களும் பயிற்சி எடுத்துப்போம். காலையில அரைமணி நேரம் ஓட்டப் பயிற்சி, வார்ம் அப், கபடி விளையாட்டு இவைதான் எங்களுக்கான பயிற்சி. வாடிவாசல் ஜல்லிக்கட்டு மட்டுமில்லாம சிவகங்கை ஜில்லாவோட வட ஜல்லிக்கட்டு, மேலூர், திருமயத்தோட வெளி விரட்டுன்னு அத்தனையும் எங்க ஊரு பிடிகாரர்களுக்கு அத்துப்படி. 

jallikattu, ஜல்லிக்கட்டு

"பொதுவாக ஜல்லிக்கட்டுக்கு தயாராகுற காளைகள்ல இரண்டு வகை இருக்கு. களத்துல பாய்ஞ்சு யாரு கைலயும் பிடிபடாம வேகமா ஓடுற காளையை 'ஸ்பீடு மாடு'னு சொல்லுவோம். ரொம்ப நேரம் களத்துல நின்னு போக்கு காட்டுற காளைகள் வெளாட்டு (விளையாட்டு) மாடு. போனதடவை ஜல்லிக்கட்டு களத்துல 1200 பேரை இறக்கி விட்டாங்க. ஆனால், அதுல 200 பேர் மட்டும்தான் மாடு பிடிச்சாங்க. சாதாரண போக்கு மாடுகளைப் பிடிச்சு சிறந்த பிடிகாரர்னு பெயர் வாங்கிடறாங்க. இதனால நல்ல பிடிகாரர்களோட திறமை மறைக்கப்படுது. களத்துல நின்னு விளையாடுற விளையாட்டு மாடுகளை பிடிக்குறவன் தான் 'சிறந்த பிடிகாரர்'னு அறிவிக்கணும்.", என்றார்.

அருகில் பயிற்சியை முடித்து திரும்பிய மற்றொரு இளைஞர், ஜல்லிக்கட்டு விதிமுறைகள் மற்றும் சில குறைகள் பற்றி பேசினார், "காளைகளோட கழுத்தைப்  பிடிக்கக் கூடாது, காலைப் பின்னக் கூடாது, கொம்பைப் பிடிக்கக் கூடாது, திமில மட்டும் தான் பிடிக்கணும்னு பல விதிமுறைகள் இருக்கு. சிந்து ரக மாடுகளுக்கு திமிலே கிடையாது. அதை எப்படிப்  பிடிக்கணும்னு யாருமே சொல்லல. நல்ல மாடுபிடி வீரர்களுக்கு களத்துல முக்கியத்துவம் கொடுக்கணும். அரசு நடத்துற ஜல்லிக்கட்டுதான் இது. களத்துல அடிபடுற வீரர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி தரமாட்டேங்குறாங்க. மாடு பிடிக்குறது நாங்க, அடிபடறதும் நாங்க, ஆனா உள்ளூர் வீரர்களான எங்களுக்கு களத்துல முன்னுரிமை கொடுக்கறது இல்ல."

ஜல்லிக்கட்டு, jallikattu

"எங்களுக்கு 4-வது ஷிப்ட்ல பனியன் கொடுக்குறாங்க. ஆனா நாங்க பிடிக்க நினைக்குற காளைகள் எல்லாம் முதல் ஷிப்ட்ல வந்துரும். 'இந்த காளை வந்தா நான் பிடிப்பேன்'னு சொல்ல முடியல. 'உள்ளூர் மாடு விலை போகாது'ன்னு சொல்றது மாதிரி, எங்க ஊர் ஜல்லிக்கட்டுல எங்களுக்கு இடம் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. உள்ளூர் பிடிகாரங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து அரசாங்கம் 100 பனியன் ஒதுக்கிக் கொடுக்கணும். ஆனால், ஒரு விஷயம், வெளியூர் ஜல்லிக்கட்டுல எங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க. வெற்றிலை, பாக்கு வைச்சு மரியாதையா அவங்க ஊர் ஜல்லிக்கட்டுக்கு அழைப்பு கொடுத்துட்டு போவாங்க. காளையைப் பிடிக்குறது பரிசுக்காக இல்ல ஒரு போட்டிக்குத்தான். களத்துல இறங்குற எல்லாரும் மாடு பிடிச்சுட முடியாது.  எவ்வளவுதான் பயிற்சி எடுத்துக்கிட்டாலும், ஒரு மாடுபிடி வீரனுக்கு முக்கியமானது மனஉறுதிதான். காயத்துக்கு பயந்து பின்வாங்குறவன் எப்பவும் மாடுபிடி வீரனாக முடியாது" என்றார் தீர்க்கமாக.


டிரெண்டிங் @ விகடன்