கேட்பாரின்றி கிடக்கும் பார்சல்கள்! கிராமங்களில் முடங்கிப்போன தபால் சேவை

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பேருந்துகள் இயக்கப்படாததால், கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய தபால் பார்சல்கள் பேருந்து நிலையங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன. அதனால் அவசரத் தகவல்கள் உரியவர்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தபால் சேவை முடக்கம்    

தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசுடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேருந்துகள் இயங்கவில்லை. 

நெல்லை மாவட்டத்தில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 80 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே முடங்கிக் கிடக்கின்றன. பேருந்துகள் இயங்காததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வேலைக்குச் செல்பவர்கள், மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு உள்ளானார்கள். 

நெல்லை மாவட்டத்தில் நெல்லை வண்ணார் பேட்டை, கே.டி.சி நகர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், வள்ளியூர் என மொத்தம் 13 பணிமனைகள் உள்ளன. பேருந்துகளை இயக்க ஆள் இல்லாததால் பணிமனைகளில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 80 சதவிகிதம் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய தபால் பார்சல்கள் பேருந்து நிலையங்களிலேயே கேட்பாரின்றி கிடக்கின்றன. கிராமப் பகுதிகளில் தபால் சேவை முடங்கியதால் பொதுமக்களுக்குச் சென்று சேரவேண்டிய தகவல்களில் சுணக்கம் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!