வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (05/01/2018)

கடைசி தொடர்பு:12:50 (05/01/2018)

பஸ்ஸை இயக்குவதா? போலீஸ்- போக்குவரத்து தொழிலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு!

transport

ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர்.  பேருந்துகள் இயக்கம் முடக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மதுரையில் போக்குவரத்துப் பணிமனையில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்களைக்கொண்டு 8 பஸ்களை இயக்கியதால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். பேருந்து இயக்குபவர்களை தடுக்க முயன்றதால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில் ஒரு சில பேருந்துகள் இயங்கினாலும் பெரியார், ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்துநிலையங்களில் பேருந்துகள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனால், மதுரை நகரம் முழுதும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதியில் காவல்துறையினரே சேர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிவிட்டு உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.