வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (05/01/2018)

கடைசி தொடர்பு:20:59 (05/01/2018)

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டப் பின்னணி! #BusStrike

பேருந்து போக்குவரத்து

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சென்னைக் குரோம்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில் நடைபெற்றது. தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஜனவரி 4-ம் தேதி மாலை முதலே போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், நேற்றும், இன்றும் பயணிகள், அலுவலகம் செல்வோர், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

போராட்டத்தின் பின்னணி: 

சி.ஐ.டி.யு

மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக வழங்காமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இவர்களின் கோரிக்கையை மாநில அரசு, ஒரு பொருட்டாகவே மதிக்காமலும், ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை நடத்தாமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்தநிலையில் 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது அடிப்படை சம்பளத்திலிருந்து 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், "நான்கு வருடங்களுக்கு ஒருமுறை 2.44 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார். ஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள் அதனை ஏற்கவில்லை. "தற்போதுள்ள நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு, முதல்வரிடம் இதுபற்றி கலந்தாலோசித்த பின் முடிவெடுக்கப்படும். அதனால் ஜனவரி 3-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று கூறியிருந்தார். ஆனால், ஜனவரி 3-ல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றதால் திட்டமிட்டபடி அன்றையதினம் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதையடுத்து ஜனவரி 4-ம் தேதி குரோம்பேட்டை பல்லவன் இல்ல பணிமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 46 போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிகள், 8 போக்குவரத்துத் துறை இயக்குநர்கள், துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

bus

 

விஜயபாஸ்கர் பேட்டி :

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், முதல்வர் மற்றும் நிதித்துறைச் செயலர் ஆகியோரிடம் கலந்தாலோசித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தோம். இதனால் அரசுக்கு 81 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகிறது. மேலும், 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாததால், அவர்களுக்கு 3 சதவிகித ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மாதம் இரண்டு கோடி ரூபாய் செலவாகும். தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் 2,684 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 11,361 ரூபாய் வரை சம்பள உயர்வு வழங்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது" என்று அறிவித்தார்.

 

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் :

போக்குவரத்து

ஆனால், அமைச்சரின் இந்த அறிவிப்பை போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. 'தாங்கள் கேட்டுக்கொண்ட ஊதிய உயர்வை வழங்கவில்லை என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்' என்று அறிவித்து, அதன்படி ஜனவரி 4-ம் தேதி மாலையிலிருந்தே வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், தாம்பரம் பணிமனையில் தொடங்கி, கோயம்பேடு, பாரிமுனை, மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், வடபழனி, அம்பத்தூர் என பெரும்பாலான பணிமனைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாகத் தொடங்கியது. நேற்று இரவு தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் பேருந்து போக்குவரத்து சேவை முடங்கியது. ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையங்களிலும், முக்கிய சாலைகளிலும் பேருந்துக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். பலர் நடந்தும், ஆட்டோ, புறநகர் ரயில்கள் போன்றவற்றிலும் வீடுகளுக்குத் திரும்பினர். வெளியூர்களுக்குச் சென்ற பயணிகள் பேருந்து நிலையத்திலேயே தவித்தனர்.  

பின்வாங்கிய போக்குவரத்து சங்கங்கள்:

போக்குவரத்து

இந்தப் பேச்சுவாரத்தையில் அரசின் முடிவை அண்ணா தொழிற்சங்கம் உள்பட சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அரசின் முடிவை ஏற்காமல் பாதியிலேயே வெளியேறிவிட்டனர். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட ஒருசில சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர். எனினும், சுமார் 70 சதவிகிதம் அளவிலான பேருந்துகள் இன்றும் இயக்கப்படவில்லை. இயக்கப்படும் பேருந்துகளும் போலீஸ் பாதுகாப்புடனேயே இயக்கப்படுகின்றன. 

கோயம்பேடு பேருந்துநிலையம்:

கோயம்பேடு பேருந்து நிலையம்

பேருந்துகள் திடீரென்று நிறுத்தப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய நடுத்தரவர்க்கத்தினர், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகினர். முன்னெச்சரிக்கையாக பலர் அலுவலக நேரத்துக்கு முன்பே வீட்டுக்குக் கிளம்பினர். வேறு சிலர் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்ல நேரிட்டது. ஷேர் ஆட்டோ, ஆட்டோ போன்றவை வழக்கைத்தை விடவும் பிஸியாக இயங்கின. எப்போதும் பரப்பரப்பாக இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் வியாழக்கிழமை இரவு முதல் பயணிகள் அதிகமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஒருசில புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கத்தில் இருந்தன. அதுபோன்று இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேசியபோது, "என்ன சார் பண்றது... ஒட்டுமொத்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலனுக்காகவும்தான் எங்களோட சக தொழிலாளர்கள் போராட்டம் நடத்துறாங்க. ஆனா, அரசியல் கட்சிக்காரங்க கையிலதான் பேருந்துகளின் பணிமனைகள் இருக்கு. அவங்க சொல்றதுதான் சட்டம். அவங்கள எதிர்க்க முடியாது. நாங்க வெளியூர் பணிமனையைச் சேர்ந்தவங்க. அங்கிருந்து போன் கால் வருது. வண்டியை எடுத்தா எங்க தொழிலாளர்களை பகைச்சுக்க வேண்டிவரும். வண்டியை எடுக்கலைன்னா கட்சி ஆளுங்க கன்ட்ரோல்ல இருக்குற பணிமனையைப் பகைச்சுக்க வேண்டிய நிலை. எங்க ஆளுங்ககிட்டகூட சொல்லி புரியவச்சுறலாம். ஆனா, கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினருக்குச் சொல்லி புரியவைக்க முடியாது. நாங்க சொல்லியும்கூட கேக்கலையான்னு எங்க வேலைக்கே உலை வெச்சிருவாங்க. எப்படியாவது வண்டிய கொண்டுபோய் பணிமனையிலே சேர்த்துட்டு, உடம்பு முடியலன்னு வீட்டுக்குப் போயிடணும். உண்மையிலே உடம்பு சரியில்லாமப் போனாக்கூட சந்தோஷம்தான். ஏன்னா அவங்களப் பகைச்சுக்கிட்டு எங்களால வேலைசெய்ய முடியாது. லீவ் இல்லாம, தூக்கம் இல்லாம, மிக மோசமான நிலையில இருக்கற வண்டிய எடுத்துக்கிட்டு நூற்றுக்கணக்கான மக்களை தினம்தினம் பத்திரமா ஏத்திக்கிட்டுப் போற எங்களுக்குச் சம்பளமோ ரொம்ப கம்மி. இந்தப் போராட்டத்துலயாவது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கணும். அவ்வளவுதான் எங்க விருப்பம் சார்" என்றனர்.

எம்.எல்.ஏ-க்கள் என்ற பெயரில் அரசுப் பிரதிநிதிகளாக வலம் வருபவர்களுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் சம்பளமும், சிறப்புச் சலுகைகளும் வழங்கும் இந்த அரசு, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தினம், தினம் மக்களைப் பாதுகாப்புடன் பேருந்துகளில் அழைத்துக்கொண்டு, அவர்கள் செல்லவேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாக அவர்களைச் சேர்க்கும் போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்க மறுக்கிறது. தொழிலாளர்கள் ஓய்வு பெற்றாலும், அவர்களின் ஓய்வூதியப் பலன்களை வழங்க நிதியில்லை என்று கூறி நிறுத்திவைக்கிறது அரசு. இனிமேலாவது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா...?