'மேலே படிக்கவைக்க முடியவில்லை'- மகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ-வின் மகன்கள் ஆடி காரில் பவனிப்பதைப் பார்த்திருக்கிறோம். ராஜஸ்தானின் ஜம்வா ராம்கார் தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., ஜக்தீஷ் நாராயண் என்பவரி ன் மகன் ராமகிருஷ்ணா, பியூன் வேலையில் சேர்ந்திருக்கிறார். எம்.எல்.ஏ-வின் செல்வாக்கால் மகனுக்கு பியூன் வேலை கிடைத்துள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது. 

பியூன் ஆன எம்.எல்.ஏ மகன்

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில், பியூன் வேலைக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இதில், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஒருவரும் அடக்கம். இது தவிர 129 இன்ஜினீயர்கள், 29 வழக்கறிஞர்கள், 393 முதுகலை மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளங்கலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்திருந்தனர். இறுதியாக, 18 பேர் மட்டுமே பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், 10-ம் வகுப்பு படித்த ராம்கிருஷ்ணாவும் ஒருவர். இவர், பழங்குடியினப்பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இந்த படிப்புக்கு 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. அந்த வகையில், ராம்கிருஷ்ணா அதிக தகுதியுடையவராகிறார். 

''ராம்கிருஷ்ணா 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதிகத் தகுதியுடைய  இவருக்கு, ஏன் இந்தப் பணி வழங்க வேண்டும்? எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு காரணமாக மகனுக்கு பியூன் வேலை கிடைத்துள்ளது'' என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த எம்.எல்.ஏ., ஜக்தீஷ் நாராயண் மீனா கூறுகையில், '' என் செல்வாக்கைப் பயன்படுத்தி மகனுக்கு பியூன் வேலைதான் வாங்கித் தர வேண்டுமா. இதைவிட நல்ல வேலையில் அல்லவா சேர்த்துவிடுவேன். என் மகன் தேர்வில் எந்தத் தவறும் இல்லை. நேர்மையான முறையில்தான் அவனுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இவர்தான் என் மூத்த மகன். எனது விவசாய நிலத்தையும், தன் சகோதரர்களையும் அவன் பார்த்துக்கொண்டதால், மேலே படிக்கவைக்க முடியவில்லை'' என்றார்.

எம்.எல்.ஏ-வின் மகன்கள் ஆடி காரில் போனாலும் பியூன் ஆனாலும் சர்ச்சைதான் போலும்!


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!