`எண்ட் டு எண்ட் மட்டுமே இயக்கப்படுகிறது' - தமிழகத்துக்கு பஸ்ஸை நிறுத்தியது கேரளா

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதியக்குழு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 16 முறை நடந்தும் தீர்வு கிடைக்காததால், இன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் வடசேரி பேருந்து நிலையத்தில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். நேற்றிரவு முதல் நாகர்கோவிலில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்குத் தேவையான பஸ்கள் இயக்கப்படுகிறது.

 இன்று முதல் முழுமையாக பஸ்கள் இயங்காது என போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர். அதுபோல, முன்பதிவு காரணமாகக் குறைந்த அளவு  எஸ்இடிசி பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று காலை முதல், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், குமரி மாவட்டத்தில் 80 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளிலும் சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர, மற்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பஸ்களை இயக்க வரவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லாததாலும் குறைந்த அளவில் மினி பேருந்துகள் இயங்குவதாலும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ- மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

 திருவனந்தபுரத்திலிருந்து  நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு கேரள அரசு பஸ்கள் இயங்குவது வழக்கம். ஆனால் இன்று, கேரள பஸ்கள் இயக்கப்படவில்லை. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பஸ்கள் செல்கின்றன. நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்கு எண்ட் டு எண்ட் பஸ்கள் மட்டும் தொடர்ந்து இயங்கிவருகின்றன.  பஸ்கள் இயங்காததால், அதிகம் பேர் ரயில்மூலம் திருவனந்தபுரம் சென்றனர். பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!