வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:00 (05/01/2018)

`இந்த அரசுக்குக் கவலையில்லை!’ - கடுகடுக்கும் பொதுமக்கள்

ஊதிய உயர்வு தொடர்பாக அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் தாக்கம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான ஓசூரிலும் எதிரொலித்தது.

salem

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், தொழிற்சாலைக்குச் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தினக்கூலிகள், வெளியூருக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிறுவனத்துக்குச் செல்வதற்காக விடியற் காலை முதலே காத்துக்கிடந்த கார்த்திக் என்பவரிடம்  நாம் பேசியபோது , 6 மணிக்கெல்லாம் நான் நிறுவனத்துக்குள்  சென்றிருக்க வேண்டும். ஆனால் 7.00 மணி ஆகியும் இன்னும் பேருந்துகள் வரவில்லை. ஏனென்று கேட்டால் சரியான  பதில் சொல்லத் தயங்குகின்றனர் ஊழியர்கள் " என காட்டமாக பதில் சொல்கிறார்.

salem

"நான் தினக்கூலி சார், கம்பெனிக்குள்ள இருக்கிற மெட்டீரியலை வண்டியில ஏத்திவிடும் வேலை பாக்குறேன். காலையிலருந்து சாயங்காலம் வரைக்கும் இந்த வேலைய செஞ்சாதான் எனக்கு காசு கொடுப்பாங்க. பஸ் ஏதும் போகாததால என்னால இன்னைக்கு வேலைக்குப் போக முடியல சார். என்னாச்சுனு கேட்டா, ஸ்ட்ரைக்குனு  சொல்றாங்க" என்று குமுறுகிறார் கணேசன்.

கல்லூரி மாணவரான ராமமூர்த்தியிடம் பேசியபோது, "போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்க வேண்டும். இரவு பகல் பாராமல் உழைக்கும் இந்த ஊழியர்களிடத்தில் அரசு இப்படி நடந்துக்கலாமா..? பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் இந்த அரசாங்கத்துக்கு கவலை இல்லை என்பதையே நான் உணர்கிறேன்" என்று பேசியவாறே வந்த தனியார் பேருந்தில் ஏறி கிளம்பிவிட்டார்.

பேருந்துகள் இயங்காததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தனியார் பேருந்துகள்தான் ஒரே ஆறுதல். ஆனாலும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. தனியார் பேருந்துகள் முக்கிய இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதால், தொலைதூர கிராமத்துக்குச் செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உடனடி எதிர்பார்ப்பு.