பணிமனையில் முடங்கிக் கிடக்கும் 435 பேருந்துகள்! தொழிலாளர்களால் தேனியில் பதற்றம்

தேனி மாவட்டத்தில், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால், இன்று போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 7 பணிமனைகளில் மொத்தம் 435 பேருந்துகள் உள்ளன. இவை அனைத்தும் அந்தந்தப் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

பி.சி. பட்டி பேருந்துப் பணிமனையில், சுமார் 90 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பெரியகுளம் பணிமனையில் 68 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை பி.சி.பட்டி பணிமனை முன்பு திரண்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள், போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இறுதியில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் நடத்தாமல் பணிமனை வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்கள். தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை வரவழைத்து, பேருந்துகளை இயக்கவிடாமல் பணிமனை வாயிலில் ஊழியர்கள் நின்றுகொண்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி, தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றன.

இதனால், மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், தேனி புதிய பேருந்துநிலையத்துக்குச் சென்று முறையான அனுமதியுடன்தான் தனியார் வாகனம் இயக்கப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஏதேனும் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்று விசாரணை நடத்தினர். தேனி புதிய பேருந்துநிலையத்தில், தனியார் பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!