`ஒட்டுமொத்த வாக்காளர்களின் மனதையும் புண்படுத்திவிட்டார்' - கமல்ஹாசனுக்கு எதிராகப் போலீஸில் புகார்

தமிழக வாக்காளர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் சாதிக் பாட்சா. தமிழர் பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பின் செயலாளரான இவர், உடுமலை காவல் ஆய்வாளரைச் சந்தித்து கமல்ஹாசன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இதுகுறித்து சாதிக் பாட்சாவிடம் பேசியபோது, "சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், கமல்ஹாசனின் நிலைப்பாட்டுக்கு எதிரான டி.டி.வி.தினகரன், வெற்றிபெற்றிருக்கிறார். இந்நிலையில், தினகரனின் வெற்றியைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பிச்சைக்காரர்கள் என்ற தொனியில் கேவலப்படுத்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

வாக்காளர்கள் அனைவருமே பணம் வாங்கிவிட்டுத்தான் ஓட்டுப்போட்டார்கள் என்று கூறியிருப்பது ஒட்டுமொத்த வாக்காளர்களின் மனதையும் புண்படுத்தும்படி இருக்கிறது. அனைவருமே பணம் வாங்கிவிட்டுதான் ஓட்டு போட்டார்கள் என்று இவருக்கு எப்படித் தெரியும். தமிழ்ச் சமூகத்தையே கேவலப்படுத்தும் விதமாகப் போகிறபோக்கில் கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. நாட்டில் கையூட்டுப் பெறாமல் காரியம் நடத்தும் அரசு அலுவலகங்கள் ஏதாவது இருக்கிறதா. இதுவரை அதைப் பற்றியெல்லாம் இவர் வாய் திறந்திருக்கிறாரா. இவர் எந்த அரசு அலுவலகத்தில் தன்னுடைய காரியங்களுக்காக மக்களுடன் வரிசையில் நின்றிருக்கிறார். ஒட்டுமொத்த சமூகத்தையும் விமர்சிப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் கமல்ஹாசன் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். எனவே, அவர்மீது உரிய குற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறி, உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!