வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:33 (05/01/2018)

`ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்திவிட்டார்' - கமலுக்கு எதிராகக் கோவை நீதிமன்றத்தில் வழக்கு

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவாகப் பேசியதற்காகக் கமல்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.‌

பரபரப்புக்கும் புகார்களுக்கும் சற்றும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். குறிப்பாக, அதில் நடந்த பணப்பட்டுவாடா குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஆர்.கே.நகர் மக்களை இழிவாகப் பேசிய நடிகர் கமல்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் என்பவர், கோவை 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகின்ற 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவர் ஏற்கெனவே, பீப் பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புமீது தொடர்ந்த வழக்கு, விஸ்வரூபம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

‌இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்காக நான் 4 நாள்கள் களப்பணியாற்றினேன். இந்நிலையில், நேற்று வெளியான ஆனந்த விகடன் இதழில், `என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தொடரில், ஆர்.கே.நகர் மக்களையும் நான் மிகவும் நேசிக்கும் எங்கள் தலைவர் தினகரன் பற்றியும் கமல் இழிவாகப் பேசியுள்ளார். அதற்காகத்தான் வழக்கு தொடர்ந்துள்ளேன்'' என்றார்.