வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:15 (05/01/2018)

3 பேருக்கு நேர்காணல் நடத்தும் ஆளுநர்! பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு?

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு பல கட்ட தேர்வுகள் நிறைவு பெற்று இறுதியாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குழந்தைவேலு, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வெங்கடாசலம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பார்த்தசாரதி ஆகிய 3 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களை நாளைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகையில் நேர்காணல் நடத்தி இந்த 3 பேரில் ஒருவரை நாளை அல்லது திங்கள்கிழமை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அறிவிக்க இருக்கிறார். அதையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் கேட்டபோது, முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் இறுதியாகப் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த சுவாமிநாதனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து  பல்கலைக்கழகத்தில் 60 சதவிகிதம் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போதிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களாக நியமனம் செய்தது, தமிழகத்தில் வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத லீன் வேக்கன்ஸியில் ஆசிரியர்களை நிரப்பியது, முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியது, சி.எம்.டி.ஏ அனுமதி இல்லாமல் பல கோடிக்கு கட்டடம் கட்டியது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியது, சமீபத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டது.

இதை அனைத்தையும் மூடி மறைக்க வேண்டும் என்றால் பழனியப்பனுக்கும் சுவாமிநாதனுக்கு வேண்டப்பட்ட குழந்தைவேலு  துணைவேந்தராக வந்தால் மட்டுமே முடியும். ஏனென்றால் பழனியப்பன், சுவாமிநாதன், குழந்தைவேலு மூவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சுவாமிநாதன் பாரதியார் பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக இருந்தபோது குழந்தைவேலு இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். சுவாமிநாதனுக்கு பினாமியாகவும் செயல்பட்டவர். அதனால் பழனியப்பனும் சுவாமிநாதனும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் குழந்தைவேலு வர வேண்டும் என்று பலகோடி அன்பளிப்பு வழங்கியதோடு  தங்கள் சமூகத்தை சேர்ந்த கேரள அளுநர், தமிழக முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் உதவியை நாடி இருக்கிறார்கள். அவர்களும் கிரீன் சிக்னல் காட்டியத்தையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு என்று அறிவிக்கப்படாத முடிசூடி விட்டார்கள்'' என்று கூறினார்கள்.