வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:40 (05/01/2018)

மதுரை விமான நிலையத்துக்குப் பெயர் சூட்டும் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்துக்குப் பெயர் சூட்டும் விவகாரம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி பேசியதற்கு எதிராகத் திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய பி.ஜே.பி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ‘மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நேதாஜிக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதற்காக அவரது பெயரை சூட்ட மறுக்கிறார்கள்’ என்றார்.

சுப்பிரமணிய சுவாமி

இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு, ``விமான நிலையங்களுக்குப் பெயர் மாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன்பிறகே பெயர் மாற்றம் செய்யப்படும். ஆனால், பொதுக் கட்டடங்களுக்கோ இடங்களுக்கோ பிரபலமானவர்களின் பெயர்களை சூட்ட தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் ஐயப்பன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல் சேகரன் பெயரை சூட்டுவதற்குத் தடையாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமியைக் குற்றம்சாட்டிய அவர்கள், அவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியதுடன், சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்படத்தை எரிக்க முற்பட்டனர். அப்போது திருச்சி கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார் தடுக்க முயன்றதால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், திருச்சி பெரியார் சிலை முன்புள்ள சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக போலீஸார் போராட்டக்காரர்களைக் கைதுசெய்தனர். ஏற்கெனவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் ஒருபக்கம் இருக்க, இந்தப் போராட்டத்தாலும் திருச்சியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க