காஞ்சியில் 20% பஸ்கள் மட்டுமே இயக்கம்; மின்சார ரயிலில் குவியும் பயணிகள்! அலர்ட் நிலையில் போலீஸ்

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், காஞ்சிபுரம் ஸ்தம்பித்துள்ளது. சென்னையில் வேலை செல்லும் ஊழியர்களும், வெளியூர் செல்லும் பொதுமக்களும் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டுமே பேருந்துகளை இயக்கிவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்ளிட்ட மற்ற ஒன்பது  தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 920 பேருந்துகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 20 சதவிகிதத்துக்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், காஞ்சிபுரம் பணிமனை முன்பாக அமர்ந்தும், படுத்துக்கொண்டும் பேருந்துகளை இயக்கக் கூடாது எனப் போராட்டம் செய்துவருகின்றனர். சுற்றுலாப் பயணிகளும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் பேருந்துகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே பயிற்சிபெற்ற ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களைவைத்து காலையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றும் வெளியூர்களுக்குச் செல்பவர்கள், பேருந்துகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே சென்னைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை செல்பவர்களின் கூட்டம் அதிக அளவு  இருக்கிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, இப்பகுதியிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் பணிமனையில் உள்ள 190 பேருந்துகளில், 48 மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டுவருகின்றன. குரோம்பேட்டை பணிமனையில் உள்ள 200 பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதனால், பொதுமக்கள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அதிகமாக இருக்கிறது. ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புலம்புகின்றனர். தொழிலாளர்களுக்கிடையே பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், பணிமனைகள் இருக்கும் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு பணிமனையில் உள்ள 110 பேருந்துகளில், 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!