“ஆன்மிக அரசியல்னா என்ன...?” - தினகரன் கேள்வி | What is meant by spiritual politics - TTV Dinkaran intervew

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (05/01/2018)

கடைசி தொடர்பு:16:25 (05/01/2018)

“ஆன்மிக அரசியல்னா என்ன...?” - தினகரன் கேள்வி

“திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வரப்போகிறது என்கிறார்கள்; என்ன செய்யப்போகிறார்கள்? திராவிடர்களை அழிக்கப்போகிறார்களா? இது திராவிட நாடு, பெரியார் மண், அதை யாராலும் அழிக்கமுடியாது, திராவிடம் என்ற மலையில் மோதினால் அவர்கள் தலைதான் உடையப்போகிறது” என்று கூறி, ரஜினியின் அரசியல் பிரவேசம்பற்றி மறைமுக விமர்சனம் செய்து அதிரவைத்திருக்கிறார் டி.டி.வி. தினகரன். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் முதல்முறையாக டி.டி.வி. தினகரன், தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். விமான நிலையத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு அவருக்குப் பிரமாண்ட வரவேற்பளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு, பெருமகிழ்ச்சியுடன் வந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆன்மீக

“போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு சம்பந்தமாக அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்களே?” 

“தொழிலாளர்களின் பிரச்னையைத் தீர்க்கமுடியாத அரசாகத்தான் இந்த அரசு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதை, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என, இந்த மக்கள் விரோத அரசு மாற்றியதே இப்பிரச்னைக்குக் காரணம். தொழிலாளர்களின் பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். ஆனால், இந்த அரசு பெயருக்கு மட்டுமே அரசாக உள்ளது. இந்த அரசு இருப்பதை மக்கள் ஏற்றுகொள்ளவில்லை. யாருடைய பிரச்னைகளைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. இதில் போக்குவரத்து ஊழியர்களும் விதிவிலக்கல்ல”

“செங்கோட்டையன் வகித்த அவை முன்னவர் என்ற பொறுப்பு மீண்டும் ஓ.பி.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதே? இதனால் மன வருத்தத்திலிருக்கும் செங்கோட்டையன், உங்கள் பக்கம் வரக்கூடும் என்று சொல்லப்படுகிறதே? மேலும் பலரும் உங்கள் பக்கம் வர பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“அதுபற்றி எனக்குத் தெரியாது. செங்கோட்டையன் என்னிடம் பேசவில்லை. வேறு யாரும் என்னுடன் தொடர்புகொள்ளவில்லை...”

 

ஆன்மிக

“ஆடிட்டர் குருமூர்த்தி சொன்ன மிகமோசமான வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்கள், பத்து நாள்களாகியும் மேற்கொண்டு வேறெந்த எதிர்கருத்தும் சொல்லவில்லையே...?”  

“வாட்ஸ் அப்பில் அரசியல் விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியாளர்கள், குருமூர்த்தி விவகாரத்தில் அமைதிகாப்பதன் மூலம், இந்த ஆட்சி யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.”

“தமிழகத்தில் இனி ஆன்மிக அரசியல்தான்; திராவிடக் கட்சிகளின் அரசியல் இருக்காது என்று ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பின், பி.ஜே.பி. ஆதரவாளர்கள் சொல்கிறார்களே? அது சாத்தியமா?”

“அதெல்லாம் நடக்காத விஷயம். ‘திராவிட அரசியலுக்கு மாற்றாக, ஆன்மிக அரசியல் வரப்போகிறது' என்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள்? திராவிடர்கள் அனைவரையும் அழிக்கப் போகிறார்களா....? இது திராவிட நாடு; பெரியார் வாழ்ந்த மண்; அதை யாராலும் அழிக்க முடியாது. திராவிடம் என்ற மலையில் மோதினால் அவர்களின் தலைதான் உடைந்துபோகும்''.

ஆன்மிக அரசியல்

“ஆர்.கே.நகரில் உங்கள் வெற்றி குறித்து நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருப்பதுபற்றி...?”

இதற்கு சென்னையிலேயே பதில் கூறிவிட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவரை கமல்ஹாசனை விமர்சித்தவர்கள், தற்போது கமலை ஆதரித்துப் பேசுகின்றனர். இப்போதுள்ள அரசைப் போன்று, பாரதிய ஜனதாவுடன் கமலும் சேர்ந்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலை மட்டுமல்ல; எந்தத் தேர்தல் களத்தையும்  பார்க்காதவர் கமல். டிவிட்டர், ஃபேஸ்புக்கில் மட்டும் அரசியல் நடத்திவிட முடியாது. மக்களுடன் கலந்து அரசியல் செய்ய வேண்டும். அப்படித்தான் தமிழகத்தில் பல மக்கள் தலைவர்கள் வந்தார்கள். கமல் நினைத்தது ஒன்று; தமிழகத்தில் நடப்பது வேறொன்று என்பதால் அவர் விரக்தியோடு பேசுகிறார்”.

“ஆர்.கே. நகரில் நீங்கள் வெற்றிபெற்றாலும் உங்கள் ஒருவரால் தொகுதி மக்களுக்குத் தேவையானதை இந்த அரசிடம் கோரிப் பெற முடியுமா...?”

“அமைச்சர்களுக்கும், எங்களுக்கும் பங்காளிச் சண்டை மட்டுமே உள்ளது. அதனை எப்படி எதிர்கொண்டு, ஆர்.கே.நகர் மக்களுக்கான தேவைகளை எப்படிப் பெறுவது என எனக்குத் தெரியும். என் தொகுதியின் வளர்ச்சிக்காக அரசிடம் தேவையானவற்றைக் கேட்டுப்பெறுவேன். அப்படி இல்லையென்றால் ஜனநாயகமுறைப்படி போராடிப் பெறுவேன்”

“தங்கள் தேர்தல் வெற்றி எரி நட்சத்திரம் போன்றது; நிரந்தரமல்ல, விரைவில் ‘டைம் பாம்’ வெடிக்கும் என்று ஹெச். ராஜா கூறியுள்ளதன் அர்த்தம் என்ன...?”

“இங்கு இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையை இந்த அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. இதைப்பற்றி சொல்ல வேறு ஒன்றுமில்லை”.

“ஜல்லிக்கட்டு விளையாட்டு வர்த்தகநோக்கத்துடன் கார்ப்பரேட்டுகளின்கைகளில் செல்கிறது. இதற்கு அரசும் ஒத்துழைப்பதாக சொல்லப்படுகிறதே...?”

“ஜல்லிக்கட்டு என்பது கிராமப்புறங்களில் நடைபெறும் பாரம்பர்ய விளையாட்டு. அதை வியாபாரமாக்கக் கூடாது. வீர விளையாட்டை விலையாக்கப் பார்க்கும்போது, ஜல்லிக்கட்டிற்காகப் போராடியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.

“கோயில் சிலை கடத்தல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி,  ‘தமிழக அரசு செயல் இழந்துவிட்டதா?’ எனக் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி...?''.

“இந்த அரசுதான், ஆறு மாதத்திற்கு முன்பே செயலிழந்து விட்டதே. தற்போது ஒரு கம்பெனி உட்கார்ந்து கல்லாப்பெட்டியை நிரப்பி வருகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாததால்தான் ஆர்.கே.நகரில் தோல்வியைச் சந்தித்தனர்”.

தொடர்ந்து பேசிய தினகரன், “பட்டாசு தொழில் நலிவடையாமல் இருக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தொழில் சார்ந்தவர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைக் கைதுசெய்வது தொடர்கதையாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close