வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (05/01/2018)

கடைசி தொடர்பு:14:55 (05/01/2018)

``இந்தப் பொருளில்தான் கூறினேன்'' - ரஜினி அரசியல்குறித்த கேள்விக்கு ராமதாஸ் விளக்கம்

ரஜினி, அரசியல் கட்சி தொடங்க இருப்பதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, இரு குடிமகன்கள் சேர்ந்து ஒரு கட்சி தொடங்க வேண்டும் என்று கூறியதைத் தவறான பொருள்படும் வகையில் திரித்து, ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாக ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ம.க சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் மற்றும் போராட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள விதம் உண்மையாகவே கவலையளிக்கிறது.

ரஜினி, அரசியல் கட்சி தொடங்க இருப்பதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, "ஏற்கெனவே கூறியிருக்கிறேன்... இரு குடிமகன்கள் சேர்ந்து ஒரு கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்தால் ஆரம்பிக்கலாம்" என்று கூறினேன். அரசியல் கட்சி தொடங்க, குறைந்தது இருவராவது தேவை என்ற அடிப்படையில்தான் இதைக் கூறினேன்.  அதில் குடிமகன்கள் என்று நான் குறிப்பிட்டது, இந்தியக் குடிமக்கள் (CITIZEN) என்ற பொருளில்தான் கூறினேன். ஆனால், சில பத்திரிகைகளில் அதைத் தவறான பொருள்படும் வகையில் திரித்ததுடன், ‘‘சிரித்தபடியே, 2 குடிமகன் என்ற வார்த்தையை அழுத்தமாகக் கூறினார்’’ என்றும் அடைப்புக்குறிக்குள் வெளியிட்டுள்ளனர்.

உண்மையில், ரஜினியின் அரசியல் கட்சிகுறித்து முதலில் கேள்வி கேட்டபோது, இரு குடிமகன்கள் சேர்ந்து கட்சி தொடங்கலாம் என்று கூறினேன். மீண்டும் அதே கேள்வியை வேறு பொருளில் கேட்டபோது, அதையே மீண்டும் கூறினேன். இதில் அழுத்தம் கொடுத்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அதேபோல, பா.ம.க-வால்தான் ரஜினி புகைபிடிப்பதைக் கைவிட்டார் என்று நான் தானாகக் கூறவில்லை. இதுதொடர்பாக ரஜினி ஏற்கெனவே கூறியதைச் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோதுதான், ரஜினி புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட பா.ம.க-தான் காரணம் என்று கூறினேன். இதுகுறித்த கேள்வியை ஊடகங்கள் போடாததால், அந்தப் பதிலின் தொனியே மாறிவிட்டது.

ஆனால், ஊடக நண்பர்கள் பா.ம.க-வுக்கு மட்டும் நெருக்கடி கலந்த இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதால், ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் செய்தியை குறுக்க வேண்டும் என்று கண்ட இடத்தில் வெட்டுவதால், தலைக்கு அடுத்து மார்பு இல்லாமல் வயிறு வந்து விடுகிறது. இதுதான், அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். ஆகவே, ஊடகங்கள் யார் சொல்கிறார்கள் என்ற அடிப்படையில் செய்தி வெளியிடாமல், எதைச் சொல்கிறார்கள் என்ற அடிப்படையில் செய்தி வெளியிட வேண்டும். அதுதான் ஊடக அறத்தின் அடிப்படை" என்று கூறியுள்ளார்.