வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (05/01/2018)

கடைசி தொடர்பு:18:43 (05/01/2018)

'பஸ் ஸ்டிரைக்குக்குக் காரணமான 33 ரூபாய் கணக்கு!' - குழப்பம், குளறுபடியுடன் ஊதியப் பேச்சுவார்த்தை #Busstrike

பஸ் ஸ்டிரைக்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் தெரிவித்த ஊதிய உயர்வில் பல்வேறு குளறுபடி, குழப்பங்கள் இருப்பதாகத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால்தான் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் ஸ்டிரைக்கிற்கு என்ன காரணம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். 

 "தமிழகத்தில், சென்னை மாநகரம் மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கோவை, சேலம், கும்பகோணம், மதுரை, நெல்லை என 8 அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்கள் உள்ளன. 24 மண்டல அலுவலகங்களும் 306 கிளைகளும் உள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், நகரப் பேருந்துகள் 10,615ம் புறநகர் பேருந்துகள் 8612ம், விரைவுப் பேருந்துகள் 664ம், மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் 419ம், மலைப்பகுதிகளில் 529ம், மாற்றுப் பேருந்துகள் (ஸ்பேர்) 2239ம் என 23,078 பேருந்துகள் உள்ளன. தினமும் 2 கோடியே 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர். தினமும் 96 லட்சம் கி.மீட்டர் தூரம் அரசுப் பேருந்துகள்  இயக்கப்படுகின்றன.

 சேவை நோக்கில் செயல்படுவதால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்துக் கழகம் கடும் நிதிச்சுமையால் சிரமப்பட்டுவருகிறது. போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர், இளநிலை உதவியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் பல்வகைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தைமூலம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுவருகிறது. ஊதிய உயர்வு,1.9.2013-ம் தேதி, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது. அடுத்த ஊதிய உயர்வு 1.9.2016ல் வழங்க வேண்டும். ஆனால், அதுதொடர்பான பேச்சுவார்த்தை அரசு தரப்பில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், 15 மாதங்கள் ஊதிய உயர்வு இல்லாமலே ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். 

 பஸ் ஸ்டிரைக்

ஊதிய உயர்வு தொடர்பாகக் கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அப்போது, நிதிச்சுமையை அரசு தரப்பில் காரணமாகச் சொல்லப்பட்டது. சென்னையில் நடந்த ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் நேற்று (4.1.2018) பங்கேற்றனர். மதியம் 12 மணியளவில் வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், 2.35 மடங்கு ஊதிய உயர்வு தருவதாகக் கூறினார். ஆனால், தொழிற்சங்கங்கள் தரப்பில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கேட்டனர். இதையடுத்து, நிதித்துறையினரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வருவதாக அமைச்சர் சென்றுவிட்டார்.

பிறகு, பிற்பகல் மூன்று மணியளவில் வந்த அமைச்சர், 2.44 மடங்கு ஊதிய உயர்வு தருவதாகக் கூறினார். அதற்கு, தொழிற்சங்கங்கள் சம்மதிக்கவில்லை. இதனால்தான் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக 17 தொழிற்சங்கங்கள் அறிவித்தன. உடனடியாக நேற்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. பஸ் ஸ்டிரைக் இன்றும் தொடர்கிறது. ஆளுங்கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சில இதர தொழிற்சங்கத்தினர் மட்டுமே பேருந்துகளை இயக்கிவருகின்றனர். மேலும், தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள்மூலம் பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்கள் கேட்ட 2.57 மடங்கு ஊதிய உயர்வை வழங்கினால் மட்டுமே வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட முடியும். அதுவரை போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவுசெய்துள்ளோம்” என்றார்.

பஸ் ஸ்டிரைக்

 ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேரும் டிரைவருக்கு, அடிப்படைச் சம்பளம் ரூ. 5,200, தர ஊதியம் ரூ. 1700. 139 சதவிகித அகவிலைப்படியைச் சேர்த்து வரும் தொகை ரூ. 9108 மற்றும் இதர சலுகைகள் என 18,000 ரூபாய் மாதந்தோறும் ஊதியமாகப் பெறுவார்கள். இதில், கண்டக்டருக்கு தர ஊதியம் 100 ரூபாய் குறைவு என்பதால், டிரைவரைவிட குறைவாகச் சம்பளம் பெறுவர். தற்போது, தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச ஊதியமாக 21,000 ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அமைச்சரும் அதிகாரிகளும் சம்மதிக்கவில்லை. அமைச்சர் தெரிவித்தபடி 2.44 மடங்கு ஊதியத்தை உயர்த்திக் கணக்குப்பார்த்தால்,(6900 X 2.44) 16,840 ரூபாய் வரும். அதை 17,700 ரூபாய் என்று உயர்த்தித் தருவதாக பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தனர். எங்களின் கணக்குப்படி, (6900 X 2.57) பார்த்தால், 17,733 ரூபாய் வரும். இந்த 33 ரூபாய் கணக்கு வித்தியாசமும் ஸ்டிரைக்குக்குக் காரணம். நாங்கள், அடிப்படை மற்றும் தர ஊதியம் ஆகியவற்றை மூன்று மடங்கு உயர்த்தித் தரும்படி கேட்டோம். அந்த வகையில் கணக்குப்பார்த்தால், 19,500 ரூபாய்தான் வரும். அதைக்கூட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், 1.1.2009-ம் ஆண்டு முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு தர, அமைச்சரும் அதிகாரிகளும் சம்மதித்தனர். ஆனால், அந்த ஊதிய உயர்வு மற்றவர்களுக்குப் பொருந்தாது என்று செக் வைத்தனர். 1.9.2013 முதல் 2016 வரை 25,000-க்கும் மேற்பட்ட டிரைவர் கண்டக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஊதிய உயர்வால்  பெரிய அளவில் பயன் இருக்காது. அமைச்சர் சம்மதித்த ஊதிய உயர்வில், சீனியாரிட்டி கருத்தில்கொள்ளப்படவில்லை.  அமைச்சர், அதிகாரிகளின் குழப்பம், குளறுபடியான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்.

பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகம், மின்வாரியம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கிடையே பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு முரண்பாடு இருந்துவருகிறது. மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் எங்களுக்கும் குறைந்தபட்சம் 1000ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை ஊதிய வேறுபாடு உள்ளது. எனவே, மின்வாரிய ஊழியர்களுக்கு நிகரான சம்பளத்தை வழங்கினால்கூட ஸ்டிரைக்கை வாபஸ் பெற வாய்ப்புள்ளது. ஆனால், ஊதிய உயர்வை வழங்காமல் இழுத்தடிக்கவே அரசு தரப்பு விரும்புகிறது. இதனால், வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதே நிலை நீடித்தால், வரும் பொங்கல் பண்டிகையின்போது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதற்குள், அரசு தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது" என்றனர். 

பஸ் ஸ்டிரைக்

1.9.2013-ம் தேதி நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின்படி, அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அடுத்த ஊதிய உயர்வு 1.9.2016-ம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது, அரசு அறிவித்த 2.44 மடங்கு ஊதிய உயர்வுப்படி கணக்கிட்டால்கூட, ஒரு ஊழியருக்குக் குறைந்தபட்சம் 2,684 ரூபாய் முதல் அதிகபட்சம் 11,361 ரூபாய் கிடைக்கும். அந்த வகையில் பார்த்தால், 15 மாத நிலுவைத் தொகையாக ஓர் ஊழியருக்குக் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை 4 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சர், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆறுமுகம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் கூறுகையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 65,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க 82 கோடி ரூபாய் செலவாகிறது. மத்திய அரசின் பென்ஷன் திட்டத்திலிருந்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களை தமிழக அரசின் ஓய்வூதிய டிரஸ்ட்டுக்கு மாற்றியது. இதன்விளைவு, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில், பணப்பற்றாக்குறை காரணமாக மாதந்தோறும் 10-ம் தேதிக்குமேல்தான் ஓய்வூதியம் கிடைத்துவருகிறது.

டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையைக் குறைக்க முடியாது. இதனால், போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவுகளை தமிழக அரசே ஏற்க வேண்டும். கடந்த 1998-ம் ஆண்டில், 1000 கோடி இழப்பிலிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய நிலைமை, 17 ஆயிரம் கோடி இழப்பாக உள்ளது. இந்தத் தொகையில் 7,000 கோடி ரூபாய் தொழிலாளர்களின் பணம். இதுவே, தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பலன்களைக் கொடுக்கமுடியாமல் போக்குவரத்துக் கழகம் திணறுகிறது. எனவே, கடன்சுமையில் சிக்கித்தவிக்கும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். மேலும் பஸ் கட்டணம், பஸ் இயக்கம் உள்ளிட்ட கொள்கை முடிவு அரசிடம்தான் உள்ளது. எனவே, சேவை நோக்கில் செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படும் இழப்பீட்டை தமிழக அரசுதான் ஈடுகட்ட வேண்டும். மின்வாரியத்தின் இழப்பீட்டுக்கு தமிழக அரசு கைகொடுப்பதுபோல போக்குவரத்துக் கழகத்தின் இழப்பீட்டிலும் அரசு அக்கறைசெலுத்த முன்வர வேண்டும்" என்றார். 

டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு?

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நிதிச்சுமையில் சிக்கித்தவித்துவருகிறது. இதனால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசு பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, சாதாரண பஸ் சேவைக்கு ஒரு கி.மீட்டருக்கு 42 பைசாவும், மலைப்பகுதியில் இயக்கப்படும் சாதாரண பஸ் சேவைக்கு 47 பைசாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, செமி டீலக்ஸ் பஸ் சேவைக்கு ஒரு கி.மீட்டருக்கு 56 பைசாவும் மலைப்பகுதிக்கு 64 பைசாவும், எக்ஸ்பிரஸ் பஸ் சேவைக்கு ஒரு கி.மீட்டருக்கு 60 பைசாவும் மலைப்பகுதிக்கு 64 பைசாவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவைக்கு ஒரு கி.மீட்டருக்கு 70 பைசாவும், ஏ.சி பஸ்களுக்கு ஒரு கி.மீட்டருக்கு 90 பைசாவும் ஏ.சி பஸ் வால்வோ சேவைக்கு ஒரு ரூபாய் 10 பைசாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

நகரப்புற பஸ் சேவைக்கு 3 ரூபாய் முதல் 12 ரூபாய் வரையிலும், எல்எல்எஸ் (எக்ஸ்பிரஸ்) பஸ் சேவைக்கு 4 ரூபாய் முதல் 13 ரூபாயும், எக்ஸ்பிரஸ் (டீலக்ஸ்) பஸ் சேவைக்கு 4 ரூபாய் முதல் 13 ரூபாயும், தாழ்தள சொகுசு பஸ் சேவைக்கு 7 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.