வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (05/01/2018)

கடைசி தொடர்பு:15:34 (27/06/2018)

பேருந்தை எப்படி ஓட்ட வேண்டும்? - தற்காலிக ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கலெக்டர்

"கரூர் மாவட்டத்தில் 90 சதவிகிதம் பேருந்துகள் இப்போது இயங்குகின்றன. அதை 100 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

 இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், "கரூர் மாவட்டத்தில் கரூர் 1-ம் நிலையில் மொத்தம் 68 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 63 பேருந்துகளும் கரூர் 2-ம் நிலையில் மொத்தம் 69 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 56 பேருந்துகளும் குளித்தலையில் மொத்தம் 43 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 35 பேருந்துகளும், அரவக்குறிச்சியில் மொத்தம் 29 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 29 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மொத்தம் 38 பேருந்துகள் இயங்கிவந்தன. அதில் இன்று 33 பேருந்துகளும் மொத்தம் 247 பேருந்துகளில் 221 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதிருக்க 90 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. அவர்களின் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய சான்றுகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு முறையாகப் பேருந்துகள் இயக்குவது குறித்தும், பயணிகளிடம் அன்பாக நடந்துகொள்வது குறித்தும் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் 
பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.