வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (05/01/2018)

கடைசி தொடர்பு:17:15 (05/01/2018)

`கிடாவைக் காப்பாற்றுங்கள்!' - ரஜினிக்கு பீட்டா அனுப்பிய அதிர்ச்சி கடிதம்

அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததைக் கொண்டாடும் வகையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் அழகர்கோயிலில் வரும் 7-ம் தேதி கிடா வெட்டி விருந்து கொடுக்க உள்ளனர். 

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தனிக்கட்சி தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகக் கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். ரஜினியின் அறிவிப்புக்கு அவரின் ரசிகர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். ரசிகர் மன்றங்களையும் பதிவு செய்யப்படாத மன்றங்களையும் ஒன்றிணைத்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க பிரத்யேக இணையதளத்தையும் ரஜினி தொடங்கியுள்ளார். ரஜினியின் அறிவிப்பைக் கொண்டாடும் வகையில் மதுரை அழகர் கோயிலில் அவரின் ரசிகர்கள் கிடா வெட்டி வரும் 7-ம் தேதி விருந்து வைக்க உள்ளனர்.  

இந்தக் கிடா விருந்தைத் தடுத்து நிறுத்தக் கோரி பீட்டா அமைப்பு, நடிகர் ரஜினிகாந்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. பீட்டா அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், `உங்களது அரசியல் பிரவேசத்துக்கு எங்களது வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி ஏற்கெனவே உங்களுக்கு இருக்கிறது. எனவே, உங்கள் பெயரால் ஆடுகளைக் கொல்ல ரசிகர்கள் திட்டமிட்டிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மதுரை அழகர் கோயிலில் வரும் 7-ம் தேதி உங்கள் ரசிகர்கள் கிடா விருந்து வைக்க இருப்பதாக அறிகிறோம். கோயிலில் கிடா வெட்டி உங்கள் ரசிகர்கள் ஆடுகளைக் கொல்லத் திட்டமிட்டிருப்பது சட்டவிரோதம். வதைக் கூடங்களைத் தவிர மற்ற இடங்களில் விலங்குகளைக் கொல்வது சட்ட விரோதம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மதுரை அழகர்கோயிலில் ஜனவரி 7-ம் தேதி கிடா வெட்டு இல்லை என்று மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. ஆனால், விருந்து உண்டு என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.