வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/01/2018)

“ஆளுநர் பதவிக்குத் தகுதியில்லாதவர் கிரண்பேடி!” - வெடிக்கும் நாராயணசாமி

“மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மட்டுமே செயல்படுகின்றார்” எனப் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

நாராயணசாமி

புதுச்சேரியில் இலவச அரிசி, சர்க்கரை வழங்குவது தொடர்பாகவும் பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி சேலை தொடர்பாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “20 கிலோ இலவச அரிசித் திட்டம் செயல்படுத்தப்படும் எனப் பொதுமக்களுக்குத் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். ஆனால், கடந்த 5 மாத காலமாக மாநில நிர்வாகியான கிரண்பேடி இலவச அரிசியை மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கக் கூடாது எனக் கோப்புகளைத் திருப்பி அனுப்பினார். 2018 மார்ச் 31-ம் தேதி வரை சிவப்பு, மஞ்சள் என இரண்டு அட்டைகளுக்கும் இலவச அரசி வழங்குவதற்கான கோப்புகளை அனுப்பியும் அதற்கு அனுமதி அளிக்காமல் கால தாமதம் செய்து வருகின்றார். அது தொடர்பாகவே தற்போது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இவை குறித்து பேசுவதற்காக அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் கந்தசாமி ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.

கிரண்பேடி

இலவச அரிசித் திட்டத்தில் அனைத்துக்கும் கோப்பை அனுப்ப வேண்டும் என்று சொல்லி வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தவே இப்படியான செயல்களைச் செய்து வருகிறார். பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவசப் பொருள்கள் தொடர்பாகத் தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். இலவச வேட்டி, சேலை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகத் துணைநிலை ஆளுநர் கூறியுள்ளது அப்பட்டமான பொய் என்பதோடு அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல். இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பான பணிகள் நடந்து வரும் வேலையில் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அரைவேக்காடு போலவும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகின்றார். மாநில வளர்ச்சியில் எவ்வித அக்கறையும் காட்டாமல் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மட்டுமே செயல்படுகின்றார். அரசு மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டில் விசாரணை அமைத்து நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தயாரா. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அந்தப் பதவிக்குத் தகுதியே இல்லாதவர்” என்றார் ஆவேசமாக.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க