மக்களைக் கொந்தளிக்க வைத்த ஆர்.டி.ஓ..! தேசிய நெடுஞ்சாலையை ஒரு மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்த பொதுமக்கள்

perambalur

"இந்த நாட்டில் மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது'' என்று பறக்கும்படை போக்குவரத்து அலுவலர்களைக் கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் பிரிவுப் பகுதியில், திருச்சி பறக்கும் படை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கணேசன் தலைமையில் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வேகமாக வந்த லாரியை வழிமறித்து ஓட்டுநரை விசாரித்திருக்கிறார்கள். அந்த லாரியைப் பின் தொடர்ந்து வந்த டிப்பர் லாரி முன்னால் நிறுத்தப்பட்ட லாரி மீது மோதி பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் காமராஜ், வேல்முருகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்குக் காரணமான வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், விபத்துக்குள்ளானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மேலும், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான் வேதனையான விஷயம். இதைக் கண்டித்து, அப்பகுதி பொது மக்கள் விபத்துக்குக் காரணமான திருச்சி பறக்கும் படை வட்டாரப் போக்குவரத்து அலுவலரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, பொது மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சாலை மறியலைக் கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!