வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/01/2018)

கடைசி தொடர்பு:18:08 (05/01/2018)

சென்னைப் புத்தகக்காட்சியில் வழிகாட்ட ரோபோ! என்ன பேர் வைக்கலாம்?!

சென்னை புத்தகக்காட்சி

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் - பபாசியின் 41ஆவது சென்னைப் புத்தகக்காட்சி வரும் 10ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் முதன்முதலாகக் கடைகளின் இருப்பிடம், புத்தகங்கள் கிடைக்கும் கடை விவரங்களைத் தெரிவிக்கும் ரோபோ வைக்கப்படும் என்று புத்தகக்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

புத்தக்காட்சி நடைபெறும் அமைந்தகரை ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில், பபாசியின் தலைவர் வயிரவன், துணைத்தலைவர் மயிலவேலன், செயலாளர் வெங்கடாச்சலம், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் இதைக் கூறினர். 

அப்போது அவர்கள் மேலும் கூறியதாவது: 

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்தப் புத்தக்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். 13 நாள்கள் நடக்கும் இந்தக் காட்சியானது, வார நாள்களில் பிற்பகல் 2 முதல் இரவு 9 மணிவரையிலும் சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாள்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். தொடக்க விழாவில் பபாசியின் சிறந்த பதிப்பாளர், எழுத்தாளர் உட்பட்ட 7 விருதுகள் வழங்கப்படும்.

விருதுகள் யார் யாருக்கு?

சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே நாராயண் விருது ஆர்.ராஜராஜனுக்கும் சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது சு.முத்துச்செல்லக்குமாருக்கும் பபாசி சிறந்த நூலக விருது கு.மகாலிங்கத்துக்கும் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது கள்ளிப்பட்டி சு.குப்புசாமிக்கும் சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது உலகத் தமிழராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் இராமர் இளங்கோவுக்கும் சிறந்த பதிப்பாளர் விருது ’கவிதா’ சேது சொக்கலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது. 

11ஆம் தேதி மாலை புத்தகக் காட்சி மைதானத்தில் திருவள்ளுவர் சிலையை பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்துவைக்கிறார். 

முன்னதாக, வரும் 8ஆம் தேதி இங்கு 2 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தவிர, பள்ளிப் பிள்ளைகள் பங்குபெறும் மேடை நிகழ்ச்சிகளும் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான தனித்தனி போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 

708 அரங்குகள்!

இந்தக் காட்சியில் 428 தமிழ் அரங்குகள், 234 ஆங்கில அரங்குகள், 22 பன்னூடக-மல்டிமீடியா அரங்குகள், 24 பொது அரங்குகள் என மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு அரங்குகள், சுற்றுச்சூழலுக்காக, அரசுத்துறைகளுக்காக, இசைக்காக, சட்டநூல்களுக்காக, ஆதார் அட்டை- அஞ்சல்துறைக்காக எனத் தனித்தனியான அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 

மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதியும் செய்யப்படும். முதல் முறையாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்படுகிறது. இதில் எல்.கே.ஜி முதல் கல்லூரிவரை பயிலும் அனைத்து மாணவர்களும் பங்குபெறலாம். 1330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும். 

காருக்கு ரூ. 30, இருசக்கரவண்டிகளுக்கு ரூ.20!

புத்தகக்காட்சிக்கு தனிப்பட்ட வாகனங்களில் வருவோருக்காக விடுமுறை நாள்களில் எதிரே உள்ள பச்சையப்பன் கல்லூரியிலும் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த ஆண்டு சென்னைக்குத் தெற்கிலிருந்து வரும் வெளியூர் வாசகர்கள், மீனம்பாக்கத்திலிருந்து பச்சையப்பன் கல்லூரிவரை வருவதற்கு மெட்ரோரயில் போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். வண்டிகளை நிறுத்துவதற்கு கார்களுக்கு 30 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். 

நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும். 12 மற்றும் அதற்குக் குறைவான வயதுடையோருக்கு அனுமதி இலவசம். 


டிரெண்டிங் @ விகடன்