வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (05/01/2018)

கடைசி தொடர்பு:18:20 (05/01/2018)

உடனடியாகப் பணிக்குத் திரும்புங்கள்! போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்துக்குத் தடை விதித்த உயர் நீதிமன்றம்

போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறி போராட்டத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ஊதிய உயர்வு தொடர்பாகத் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இந்தநிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி இந்திய மக்கள் மன்றத்தின் சார்பாக வழக்கறிஞர் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம்’ என்று கருத்துத் தெரிவித்திருந்தனர். இதுகுறித்துப் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், தங்களது கருத்தையும் கேட்டபிறகு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

இந்தநிலையில் வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.