வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (05/01/2018)

நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்

கிராமப்புற மக்கள் விவசாயத்தை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறார்கள். இயற்கை இடர்ப்பாடுகள், லாபகரமான விலை கிடைக்காத சூழல் எனப் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் உத்தரவாதமான வருமானம் தரக்கூடிய மீன் வளர்ப்புத் தொழிலுக்கு வாருங்கள் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.

 

தற்போது மிகவும் லாபகரமான தொழிலாக மீன் வளர்ப்பு திகழ்கிறது. வியாபாரிகளும் பொதுமக்களும், மீன்குளங்களுக்கே தேடி வந்து மீன்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்தளவுக்குச் சந்தை வாய்ப்புப் பிரகாசமாக இருக்கிறது. ஆனாலும் சிறு, குறு விவசாயிகள் மீன் வளர்ப்பில் ஈடுபட முடியாத சூழல் நிலவுகிறது. காரணம் இதற்குத் தேவையான முதலீடு இவர்களிடம் இல்லை.

இந்நிலையில்தான் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட, மொத்த முதலீட்டில் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை. மீன் குளம் அமைக்க 40 ஆயிரம், மீன் குஞ்சு வாங்க 5 ஆயிரம், மீன் தீவனம் வாங்க 19,250 ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் 64,250 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.