வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (05/01/2018)

கடைசி தொடர்பு:21:40 (05/01/2018)

அரசு ஊழியர்களுக்குத் தீ தடுப்புப் பயிற்சி! - மத்திய அரசுப் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

நெல்லையில் கந்துவட்டிக்கு குடும்பமே தீக்குளித்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கு தீ தடுப்புப் பயிற்சியளிக்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு

நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டிக் கொடுமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இசக்கிமுத்து அவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 4 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகச் சமூக ஆர்வலரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளருமான ராகவன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், `நெல்லை மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி நடந்த தீக்குளிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்தபோது அலுவலக வளாகத்தில் ஏராளமான அதிகாரிகளும் பொதுமக்களும் இருந்திருக்கிறார்கள்.

வழக்கு தொடர்ந்த ராகவன்ஆனால், இசக்கி முத்துவும் அவரின் குடும்பத்தினரும் தீக்குளித்தபோது, பற்றி எரிந்த நெருப்பை அணைக்கத் தெரியாத நிலையில், அங்கிருந்த மக்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அத்துடன், தீ தடுப்பு உபகரணங்களும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்திருக்கவில்லை. அதன் காரணமாகவே அப்பாவிக் குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் உடலில் தீப்பற்றி எரிந்தபோது சுற்றிலும் இருந்தவர்களில் சிலர் தரையில் கிடந்த மணலை மட்டுமே அள்ளி வீசி இருக்கிறார்கள். 

அதனால், அரசு ஊழியர்களுக்குத் தீ தடுப்பு பயிற்சிகளை அரசு சார்பாக வழங்க வேண்டும். அத்துடன், இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் துரிதமாகச் செயல்படும் வகையில், உரிய பயிற்சி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ராகவன் சார்பாக வழக்கறிஞர்களான பிரபாகரன், ரொனால்ட் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜரானார்கள். நீதிபதிகள் ஹேமலதா, சதயநாராயணன் ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், தீயணைப்புத் துறை டி.ஜி.பி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.