ஏனுங்... கொண்டாடலாம் வாங்க..! கோயம்புத்தூர் விழா ஆரம்பம்

கோயம்புத்தூரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் `கோயம்புத்தூர் விழா', கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இன்று முதல் (5-ம் தேதி) 12-ம் தேதி வரை கோவையின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படவுள்ளது கோயம்புத்தூர் விழா.

கோயம்புத்தூர் விழா

கோவையின் பெருமையை வெளி உலகுக்குச் சொல்லும் நோக்குடன்  அங்கு உள்ள பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து ஒவ்வோர் ஆண்டும் `கோயம்புத்தூர் விழா'வை நடத்திவருகிறார்கள். இது 10-ம் ஆண்டு விழா. இந்த விழாவின் சின்னமாக வ.உ.சி மைதானத்தில் நமது மாநிலப் பறவையான மரகதப் புறா வடிமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, கோவையைச் சுற்றிப்பார்க்க டபுள்டக்கர் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் கோவையின் முக்கியமான இடங்களைச் சுற்றிக்காட்டும். ஒரு ட்ரிப்பில் 42 பேர் பயணம் செய்யலாம்.  காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தப் பேருந்து தொடர்ந்து இயக்கப்படும். இந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. முன்பதிவு செய்து டோக்கன் வாங்கிக்கொண்டால் போதும். கோயம்புத்தூர் விழா நடக்கும் வரை இந்த டபுள் டக்கர் பஸ்ஸில் கோவையைச் சுற்றி மகிழலாம். ஓர் ஆள் அதிகபட்சம் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை அந்தப் பேருந்தில் வலம்வரலாம்.

அடுத்ததாக 6, 7-ம் தேதிகளில்  ரேஸ்கோர்ஸ் திட்டச் சாலையில் ஓவியச்சந்தை நடைபெறவுள்ளது. இதில் தலைசிறந்த 60 ஓவியர்கள் கலந்துகொண்டு சாலையில் ஓவியங்கள் தீட்டுவர். அடுத்தபடியாக குடை அலங்கார வேடிக்கை. பல வண்ணக் குடைகளை மேற்கூரையாக்கி மின்விளக்குகளில் ஒளிரவிடுவர். 6-ம் தேதி மதியம் 2 மணிக்கு புரூக் ஃபீல்ட்ஸ் மாலில் கொண்டாட்டம். அங்கு, கோவையின் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் இனிப்பு வகைகளின் கண்காட்சி நடக்கும்.

8-ம் தேதி காலை 7 மணிக்கு உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் தூய்மைப் பணி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கொடிசியா வணிக வளாகத்தில் திறந்தவெளித் திரையரங்கம் அமைத்து `கோவை மூவி பெஸ்ட்’  திரைப்பட விழா கொண்டாடப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளின் சிறந்த திரைப்படங்கள் அதில் திரையிடப்படவுள்ளன. 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 9-ம் தேதி மாலை 3:30 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் குழந்தைப் பருவ உடல்பருமனைத் தடுக்கும் விழிப்புஉணர்வு உறுதிமொழி ஏற்பும், 10-ம் தேதி  பம்புசெட்டுகளைக் கொண்டு பிரமாண்டமான வடிவில் `கோயம்புத்தூர்’ பெயர் வடிவமைப்பும் நடைபெறுகிறது.

covai fest

அடுத்த நாளான 11-ம் தேதி கோயம்புத்தூர்  விழாவின் சின்னம் வடிவமைக்கும் நிகழ்ச்சி பி.எஸ்.ஜி பப்ளிக் பள்ளியில் நடைபெறவிருக்கிறது.  இறுதிநாளான 12-ம் தேதி, ஆர்.எஸ் புரம் புரந்தரதாசர் அரங்கில்  மாலை 6 மணிக்கு முதல் 7 மணி வரை  கோயம்புத்தூர் நாட்டுப்புற விளையாட்டுகள்  நடைபெறவிருக்கின்றன. மாலை 6:30 மணி முதல் 9 மணி வரை மூத்தகுடி மக்களின் யோகா மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் வ.உ.சி மைதானத்தில் நடைபெறும். இவற்றோடு பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கலை இலக்கியப் போட்டிகள், புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, சொற்பொழிவு நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

“ஏனுங்... கொண்டாட வாங்க'' என்று எல்லோரையும் வரவேற்கிறது கோயம்புத்தூர் விழா -2018.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!